புதன், டிசம்பர் 09, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

3
பள்ளிக்காலம் முதல் இன்று வரை பல நண்பர்கள். வந்துசென்றவ‌ர் சிலர்; நின்று நிலைத்தவர் சிலர்...ஆனால் யாரும் நண்பராக இருந்து எதிரியாக ஆனதில்லை, இவர் ஒருவரைத்தவிர!
அப்போதெல்லாம் இவர் வந்துவிட்டால் போதும் பள்ளியாவது, பாடமாவது....வீட்டீல்  ஒரே ஆட்டந்தான்..இப்போதோ இவர் வரும்போதே எப்படா ஒழிவார் என்றாகிவிட்டது. அவ்வளவு கடுப்பு இவர்மீது.
யாருக்கு இவ்வளவு 'பில்ட்-அப்'? 
வேற யாரு,  விடாக்கண்டன் 'Mr மழை' தான்!


அடைமழை அலுவலக பயணத்திற்கு அடிக்கடி ஆப்பு வைப்பதே இதற்கு மூல காரணமாக இருந்தபோதும் மழையின் அழகு கொழும்பில் துளியும் தெரிவதில்லை என்பதும் ஒரு காரணம். மாறாக மூடப்பட்ட வீதிகளையும், அடுக்கப்பட்ட பேருந்துகளையும், பாஸ்போர்ட் சைஸ் மனிதர்களையுந்தான் பார்க்கமுடிகிறது. ஆனால் ஒன்று, கொழும்பில் சந்து பொந்து வீதிகளை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அடை மழையில் ஏறிக் குந்துங்கள் ஒரு பேருந்தில்! அதுவும் கோட்டை-‍ வத்தள மாதிரி பேருந்தென்றால் சொல்லவே வேண்டாம், இலவச சந்து, பொந்து சுற்றுலாவே நடத்துவார்க‌ள். ஆனால் என்ன, நீங்க போக‌வேண்டிய இடத்துக்கு தமிழ் சினிமா போலிஸ் மாதிரி தான் போக வேண்டியிருக்கும் (அதாங்க எல்லாம் முடிஞ்சதும் போய் சேருவாங்களே அவங்களே தான்).


அன்றும் அப்படித்தான். அலுவலக பயணம், அடை மழை....பேருந்து ஏதோ ஒரு குறுக்கு சந்தில் நுழைந்துக் கொண்டிருந்தது . இன்னைக்கும் த. சி. போலிஸ்தான்னு (நானாவது பரவாயில்லை பக்கத்தில் இருந்தவர் வாய்விட்டு புலம்பவே ஆரம்பித்திருந்தார்) செல்பேசி ரேடியோவை (அந்த ரணகளத்திளயும் ஒரு கிளுகிளுப்பு) காதில் மாட்டினேன்.

'நீங்கள் இணைந்திருப்பது வெற்றியின் விடியலோடு...'

வேறு யார், நம்ம லோஷன் அண்ணா தான்.
அன்றைய தலைப்பு என்னன்னு பார்த்தால்... ம்ஹும்,  கேட்டால்

     'மழையைப் பற்றி ஒரு வரி!'

என்ன கொடும சார் இது, கண்லதான் மழைன்னா, காதுலயுமா? சரி, நம்மளும் யோசிப்பம் என்று (உக்காந்து) யோசித்ததில் ஒரு வரியல்ல, நிறையவே தோன்றியது. கூடவே இப்படி ஒரு பதிவிற்கான யோசனையும் கிடைத்தது. எனவே இந்த பதிவிற்கு வழி கோலிய மழைக்கும், லோஷன் அண்ணாவிற்கும் நன்றிகள்.

இதோ மழைத்துளிகள் இல்லையில்லை மழை வரிகள்.

 மழை - தலைநகர வீதிகளின் தலைவலி‍. 
(அப்போது இருந்த நிலைமையில் முதலில் தோன்றியது இதுதான்)


மழை - குடைகளின் அலுவலகம்


மழை - கிரிக்கெட்டின் துயரம் .


ஜொள்ளுக்காக ஒரு வரி
 மழை - கவர்ச்சி நாயகிகளின் 'COMMON COSTUME'


லொல்லுக்காக ஒரு வரி
மழை - ஜெயம் ரவி, ஸ்ரேயா மற்றும் பலர்.
(அட, மழை திரைப்படம் பற்றி சொன்னேங்க.)



கடைசியாக.....

மழை
நனையும்போது குதூகலமாகத்தானிருந்தது‍ - அகதி முகாம்களின் நிலை நினைவிற்கு வரும் வரை!







புதன், நவம்பர் 18, 2009

நிலா எழுதிக்கொள்வது என்னவென்றால்.......

0

கவிப்பேரரசே, கவி மார்க்கண்டேயரே,இன்னும் காதல் பாடும் ஏனைய கவிகளே என்ன நடந்தது உங்களுக்கெல்லாம்?  
இப்பொழுதெல்லாம் உங்கள் பேனை என் பேரை எழுதுவதேயில்லையா?  
கறுப்பு, வெள்ளை காலத்திலிருந்தே நானும் ஒரு கதாநாயகி என்பதை மறந்துவிட்டீர்களா?
நினைவில்லையா, அப்போதே காதல் ஊமையானபோது, என்னைத்தான் உவமையாக்கினார் உங்கள் மூத்தகவி 'நிலவே என்னிடம் நெருங்காதே...'என்று.

நீங்களும் கூட என்னை தொட்டுத்தழுவிக்கொண்டுதானே இருந்தீர்கள், கொஞ்ச காலத்துக்கு முன் வரை!
விஞ்ஞானமே வியந்து கொண்டிருந்த என்னை லாவகமாக பிடித்து, உங்கள் துணையிடம் மார்தட்டிக் கொண்டீர்கள் 'அந்த நெலாவத்தான் நா கையில பிடிச்சேன்..' என்று.
'என் இனிய பொன் நிலாவே...' என்று எனக்கு தங்க முலாம் வேறு பூசிவிட்டீர்கள்.
மன்றம் வந்தும், மஞ்சம் வர மறுத்த மனைவியிடம் ' நிலாவே வா...' என்று என்னை வைத்து மெளனராகம் இசைத்தீர்கள்.
காதலியை தொட்டுவிட்டு என்னையே தொட்டுவிட்டதாக ஆம்ஸ்ட்ரோங்கையே சண்டைக்கழைத்தனர்-உங்கள் 'ரட்சகர்கள்'!
என்னை விண்ணைத்தாண்டி வரச்சொல்லிவிட்டு,நண்பனின் காதலியோடு கைகோர்த்து விளையாடிக்கொண்டிருந்தார் உங்கள் நாயகன்-கண்களில் மின்சாரக்கனவுகளோடு!
' வெண்ணிலா, இரு வானிலா...' என்று என்னை துண்டு போட்டீர்கள் - காதல் தேசத்தில்!
இவ்வளவு ஏன், ' நிலா அது வானத்து மேலே...' என 'Item Song'க்குக்கூட என்னைத்தானே ஆடவிட்டீர்கள்-அரைகுறையாக!

இப்படி எத்தனை, எத்தனையோ...சொல்லப்போனால் என்னை காதலிக்காத உங்கள் கதாநாயகர்களே இருந்ததில்லை.
இப்பொழுதெல்லாம் என்ன நடந்தது உங்களுக்கு, உங்கள் கற்பனைக்கரம் என்னை வருடுவதேயில்லையே, உங்கள் பேனை என் பேரை எழுதுவதேயில்லையே...!
விஞ்ஞானம் கரடு, முரடாக என்னை படம்பிடித்துக் காட்டிவிட்டதால் உங்கள் கற்பனையும் , காதலும் என்னை புறந்தள்ளிவிட்டனவா?
வேண்டாம், நான் தேய்வதும், மறைவதும் வானில் மட்டுமாக இருக்கட்டும், உங்கள் கற்பனையில் என்னை மறைய, ஏன் தேயக்கூட விடாதீர்கள். ஏனென்றால் என்னைக் காதலிப்பதற்கு ஒரு கூட்டமே காத்துக்கிடக்கின்றது.

இனி மீண்டும் என்னை ஆடவிடுங்கள-உங்கள் டூயட்டில்,
வாடவிடுங்கள்-உங்கள் சோகத்தில்!
யார் கண்டது, அடுத்த தேசிய விருதைக்கூட நான் உங்களுக்கு வாங்கித்தரலாம்.

இப்படிக்கு
நிலா.










வியாழன், அக்டோபர் 29, 2009

வலைப்பூவிற்கு ஓர் வணக்கம் !

11

'தோ..வந்துட்டேன்' என்று எப்போதோ பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்திருக்க வேண்டியது. என்ன செய்ய‌, என்னதான் எழுதுவதில் ஆர்வம் இருந்தாலும் செய்யும் தொழிலுக்கும் எழுத்துக்கும் இடைவெளி அதிகமாகும்போது அடிக்கடி எழுதுவதென்பது எட்டாக்கனியாகின்றது. அதனாலேயே இப்படி ஒரு வலைப்பூவை தொடங்கும் ஆர்வத்தை , தொடங்கிய பிறகு அடிக்கடி எழுத முடியுமா? என்ற கேள்வியே அடிக்கடி விழுங்கிவிட்டது. ஆனாலும் அவ்வப்போது எழுதியவற்றை Facebook இல் பதிவிட்டிருந்தேன். உங்களில் சிலர் அவற்றை வாசித்தும் இருக்கலாம்.

ஆனால் இப்போதோ ஏதோ ஒரு உந்துதல், எப்படியும் வாரத்துக்கு ஒரு முறையாவது எழுதி உங்கள் உயிரை வாங்குவது....இல்லையில்லை, மனதை வாங்குவது என்று இதோ என்னையும் களத்தில் இறக்கிவிட்டது. 'கெளம்பிட்டாய்யா இன்னொருத்தன்' என்று நீங்கள் புலம்புவது கேட்காமலில்லை. கவலப்படாதிங்கப்பா...பிரயோசனமா இருக்குமா, இல்லையா? யாமறியோம். ஆனா கொஞ்சமாவது சுவாரஷ்யமா இருக்கும்னு நம்புறேன்.

அதுசரி அது என்ன 'புதுமை விரும்பிகளுக்கு' ன்னு பில்ட்-அப் எல்லாம் பலமா இருக்கேன்னு பாக்கிறீங்களா? உண்மை தான். நம்மில் யார் புதுமை விரும்பிகளாக இல்லாதிருக்க முடியும்? எல்லோரும் ஏதோ ஒன்றில் தெரிந்தோ, தெரியாமலோ புதுமையை வரவேற்கத்தானே செய்கின்றோம். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒரு நாள் போட்டிகளுக்கு குதித்தோம். இப்போது 20-20 (இதில் 'Cheerleaders' என்ற புதுமை வேறுகதை).  Windows XPஇலிருந்து Windows Vista விற்கு தாவினோம் . இப்போதோ Windows 7. இப்படி எத்தனை, எத்தனையோ. இவ்வளவு ஏன், புதுமையை விரும்பி தானே குரங்கிலிருந்து தொடங்கி இன்று ஒரு ஒபாமாவாக, டென்டுல்கராக, கமலஹாசனாக, நீங்களாக, நானாக வந்து நிற்கின்றோம். எனவே நான் குறிப்பிட்டுள்ள புதுமை விரும்பிகள் வேறு யாருமல்ல, நான், நீங்கள், நாமனைவருமே (அப்பாடா...!)!

கடைசியாக, 'Well begin is half done' என்பார்கள். அப்படி ஒரு நல்ல தொடக்கத்தை தந்துள்ளேன் என்ற நம்பிக்கையுடனும்,  உங்கள் மேலான பின்னூட்டல்கள் அடியேனின் பேனையை மீள் நிரப்பும் என்ற எதிர்ப்பார்ப்புடனும், அடுத்த பதிவு வரும் வரை - Bi.






Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner