உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், உன் அமைதி, உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் காதோரத்து பரு, உன் உதட்டோரத்து மச்சம்........ அத்தனையும் எனக்கு அத்துப்படி. ஆனால் இன்னும் நம்பிக்கையில்லை எனக்கு - என் முழுப்பெயர் தெரியும் உனக்கென்று!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன்னை நான் பார்க்கும்பொழுதுகளில் எல்லாம் உன் மேலாடையை சரி செய்துக்கொள்ளுகின்றாய். அப்படி பார்த்தால் நீ முதலில் ஆடை அணிய வேண்டியது உன் கண்களுக்குத்தான்!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன் பெயர் தாங்கிய கடதாசித் துண்டுகள் கூட என் சேமிப்பில் பத்திரமாக. அவற்றின் காதுகளுக்கு கேட்க வாய்ப்பில்லை - உன் வீட்டு குப்பைத்தொட்டியில் கிழிந்து கிடக்கும் என் காதல் கடிதங்களின் கதறல்!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நண்பர்கள் கேட்கின்றார்கள், காதலர் தினத்தன்று காதலி உன்னிடமிருந்து பெற்ற பரிசை. எப்படி காட்டிவிடுவது - சிந்திவிட்ட கண்ணீர்த்துளிகளை!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஏமாறத்தான் முடிகின்றது, ஏமாற்றுகின்றாய் நீ என்று தெரிந்திருந்தும்!
இறுதியாக ஒன்றை மட்டும் உணர்த்திவிடு,
புரிந்துக்கொள்ள மறுக்கின்றாயா, இல்லை புரிந்துக்கொண்டு மறைக்கின்றாயா!
மகாகவி பாரதி பாடியது. எனக்கும் அவ்வாறே! (இவனுக்கு வேற எத்தன மொழி தெரிஞ்சிருக்கப்போகுதுனு நீங்க கேக்குறது விளங்குது . அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..கண்டுக்கப்படாது! )
அதிலும் தமிழிலக்கணத்தில் 'சிலேடை' எனக்கு மிகவும் பிடித்தவொன்று. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரே சொல், பல பொருள். ஆங்கிலத்தில் 'PUN' (Paranomasia) என்பார்கள். இந்த சிலேடை, சினிமாப்பாடல்களில் உரிய இடத்தில் வரும்போது....குழல், யாழ், ஏன் மழலை மொழிக் கூட தோற்றுப் போய்விடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசு கண்ணதாசன், கவி மார்க்கண்டேயர் வாலி போன்றோர் சிலேடைகளை பாடல்களில் புகுத்தும் விதம்..ஆஹா...தமிழ் தமிழ் தான், கவிஞன் கவிஞன் தான்!
முதலில் கண்ணதாசன். இவர் 'வீர அபிமன்யு' என்ற திரைப்படத்தில் 'பார்த்தேன் சிரித்தேன்' என்ற காதல் பாடலில் ஒரு இடத்தில்
'அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்'
என சிலேடையில் சிலிர்க்க வைத்திருப்பார். இதில் ஒன்று மலை+தேன் (மலைப்பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட சுவையான தேன்) மற்றையது ஆச்சர்யத்தில் மலைத்துப்போவது. மிகவும் எளிதான சிலேடை. இது மட்டுமில்லாது இந்தப்பாடல் முழுவதுமே கண்ணதாசன் ஒரு தமிழ் ஆட்சியே நடத்தியிருப்பார். அதுப்பற்றி மட்டுமே ஒரு பதிவு எழுதலாம்.
அடுத்து வாலி, மூன்று தலைமுறையாக சினிமாப்பாடல்களில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர். இவர் சமீபத்தில் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தின் 'எல்லாப் புகழும்..' என்ற பாடலில்
'எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே'
என சற்று வித்தியாசமாக வார்த்தையையும் தாண்டி, ஒரு வசனத்தையே (வேர் + வைக்கும்) சிலேடையாக புகுத்தி அசத்தியிருப்பார். ஆனால் இந்தப்படம் விஜயின் வெற்றிக்கு வேர் வைக்காமல் போனது வேற கதை.
இவை என்னதான் சிறப்பாக இருந்தாலும் எனக்கென்னவோ சிலேடை என்றவுடனே ஞாபகத்திற்கு வருவது வைரமுத்துவின் 'செவ்வாய்' தான். அமர்க்களம் திரைப்படத்தின் 'மேகங்கள் என்னைத்தொட்டு..' என்ற பாடலில் வரும்
'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன், இதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?'
என்ற வரிகளில் சிலேடையின் சிகரம் தொட்டிருப்பார். இதில் முதலாவது செவ்வாய் செவ்வாய்க்கிரகம், அடுத்தது செவ் வாய் (சிவந்த வாய்). அந்த வாய் உதிரப்போகும் வார்த்தையில் தான் அவன் உயிர் உள்ளது என்ற அர்த்தத்தில் வரும் இந்த சிலேடை வைரமுத்துவின் தமிழ் ஆளுமைக்கு ஒரு சோறு பதம்.
இந்த சிலேடைகள் தான் நான் மிகவும் ரசித்தவை. இவை தவிரவும் நிறைய இருக்கின்றன, இருக்கலாம். சமீபத்தில் கூட 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கவிதாயினி தாமரை
'ஓமணப்பெண்ணே, ஓ மணப்பெண்ணே'
என சிலேடையை இலேசாக தொட்டிருப்பார். முதல் ஓமணப்பெண் - மலையாளம், அடுத்தது 'ஓ + மணப்பெண்'(கல்யாணப்பெண்).
('ஓ மனப்பெண்ணே' என்றும் வருகிறது)
பாடல்கள் மட்டுமல்ல, திரைப்பட பெயர்களில் கூட சிலேடைகள் இருக்கின்றன. உதாரணமாக
இதுப்போல் இன்னமும் நிறையவே இருக்கின்றன- மாத்தி யோசிக்க!
அவை தொடர்ந்து வரும்.....
அதுவரை நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிலேடைகளை மனக்கண்களில் ஓட்டிடுங்கள். அப்படியே இங்கே எனக்கும் ஒரு ஓட்டிடுங்கள்.(ஓட்டு+இடுங்கள்)
(ஷ்ஷப்பா...இந்த ஒரு ஓட்டக்கேக்க எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு....அவ்...வூ)
பூங்காவின் மடியில் பூவை அவள்.
விடிந்திருந்தது, ஆம் அவள் விழித்திறந்திருந்தாள்.
பூக்களின் மேல் பனித்துளிகள் தானே வழக்கம்; பனித்துளிகள் மேல் பூ அவள், புதுமை தான்!
கன்னியவள் கரங்களின் அரவணைப்பில் புதுக்கவிதையொன்று.
ஆஹா, புதிர்க்கவிதை கைகளில் புதுக்கவிதை!
அவள் விரல்கள் கவிதைத்தாளை வருட, விழிகள் கவிதையை வருடத்தொடங்கின..
அவள் கவிதை வாசிக்க...அல்ல, வடிக்கத்தொடங்கியிருந்தாள். அவள் விழிகள் விரிந்தன, கூடவே கவிதையின் விழிகளும்!
கன்னியவள் இமை உயர, கவிதைத் தலை குனிந்தது.
அவள் இதழசைவின் 'ஹைக்கூ'வில் புதுக்கவிதை புழுங்கல் கவிதையானது.
எதுகை நயமும், மோனை நயமும் அவளது விழி அபிநயத்தில் சிக்கித்தவிக்க, கவிதையின் எண்ணம் அவள் கன்னத்து வண்ணத்தில் கரைந்துப் போயிற்று.
அவளது உள்ளங்கை உவமைகளை ஊமையாக்கியது.
சொல்லும், பொருளும் அவள் விரல்களின் ஸ்பரிஷத்தில் சிலிர்த்துப் போயிருக்க, கவிதையின் தலைப்பு ஓடிச்சென்று அவள் நெற்றிப்பொட்டின் பின்னால் ஒளிந்துக்கொண்டது.
சரிந்து விழுந்த அவளது முடிக்கீற்றில் கவிதையின் கரு தற்கொலை செய்து கொள்ள,
முதலிடக் கவிதை அவள் முன்னழகில் மூர்ச்சையானது.
வெட்கித்தலை குனிந்து, அவள் விரல் விட்டு விடைப் பெற்ற கவிதை சொல்லாமல் சொல்லிற்று,
அவள் விழி பார்த்து
'கவி மொழியால் மட்டுமல்ல, (உன்) விழியாலும் எழுதலாமென்று'!
பூங்காவிற்கு புரியவில்லை,
'கவிதை வாசித்தது அவளா, இல்லை
கவிதை வாசித்தது அவளையா' என்று!
இப்படி எத்தனை, எத்தனையோ...சொல்லப்போனால் என்னை காதலிக்காத உங்கள் கதாநாயகர்களே இருந்ததில்லை.
இப்பொழுதெல்லாம் என்ன நடந்தது உங்களுக்கு, உங்கள் கற்பனைக்கரம் என்னை வருடுவதேயில்லையே, உங்கள் பேனை என் பேரை எழுதுவதேயில்லையே...!
விஞ்ஞானம் கரடு, முரடாக என்னை படம்பிடித்துக் காட்டிவிட்டதால் உங்கள் கற்பனையும் , காதலும் என்னை புறந்தள்ளிவிட்டனவா?
வேண்டாம், நான் தேய்வதும், மறைவதும் வானில் மட்டுமாக இருக்கட்டும், உங்கள் கற்பனையில் என்னை மறைய, ஏன் தேயக்கூட விடாதீர்கள். ஏனென்றால் என்னைக் காதலிப்பதற்கு ஒரு கூட்டமே காத்துக்கிடக்கின்றது.
இனி மீண்டும் என்னை ஆடவிடுங்கள-உங்கள் டூயட்டில்,
வாடவிடுங்கள்-உங்கள் சோகத்தில்!
யார் கண்டது, அடுத்த தேசிய விருதைக்கூட நான் உங்களுக்கு வாங்கித்தரலாம்.