திங்கள், ஜூலை 19, 2010

மாத்தியோசி-2

3
'மாத்தியோசி-1' இல் திரைப்படங்களில் வந்த‌ சில சிலேடைகளை பற்றி எழுதியிருந்தேன். வரவேற்பும், பாராட்டுகளும் வந்து குவிந்தன. பின்னூட்டங்களை வாசித்து முடிக்கவே மூன்று நாள் முழுதாக முக்கவேண்டியிருந்தது. (மொத்தமா ரெண்டு ஓட்டு, ரெண்டு கமெண்ட்ஸ். அதுல ஒண்ணு நம்மளே போட்டுக்கிட்டது ......அஆங்க்). அதே உற்சாகத்திலேயே(....?) சூட்டோடு சூட்டாக மாத்தியோசி-2 ஐயும் எழுதி முடித்துமுடித்துவிட வேண்டுமென்று இதொ கிட்டத்தட்ட நான்கே மாதத்தில்
(அடங்கொய்யாலே...) மாத்தியோசி-2வும் ரெடி!

இந்தப்பதிவு மாத்தியோசிக்க வைக்கும் சில பழமொழிகளை ப‌ற்றியது. பழமொழிகள் - அனுபவங்களின் குழந்தை! அதுவும் ஒரே பழமொழி இருவேறு அனுபவத்தை த‌ந்தால் சொல்லவும் வேண்டுமா? அவ்வாறு அமைந்த சில பழ‌மொழிகளைப் பற்றியே இந்தப்பதிவு.

முதலாவதாக ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை தருமாறு வரும் ‌ பழமொழிகளில் ஒன்று.
'ஆறிலும் சாவு, நூறிலும் சாவு'
பொதுவான விளக்கம் ஆறு வயதிலும் சாவு வரலாம், நூறு வயதிலும் சாவு வரலாம். இது எல்லோரும் அறிந்தது. இதே பழமொழி
'ஆறிலும் சாவு, நூலிலும் சாவு' 
என சற்றே மருவி ஒலிக்கும்போது உணர்த்தும் அர்த்தம் வேறு (இதில் வரும் ஆறு‍ - ‍அருவி).

ஆனால் இவற்றை விட நான் அறிந்த இன்னொரு விளக்கம் மிக வித்தியாசமானது, சுவாரஷ்யமானதும் கூட‌‌. அது குருஷேத்திரப்போரில் கர்ணனின் நிலையோடு இப்பழமொழியை தொடர்புபடுத்தி பின்வருமாறு அமைகின்றது. கர்ணன்  குருஷேத்திரப்போரில் கௌரவர்கள்  (துரியோதணன் கோஷ்டி) 100 பேரோடு  இருந்தாலும் அவனை பஞ்சப்பாண்டவர்கள் போட்டுத்தாக்குவது உறுதி (அப்பயெல்லாம் நல்லவங்கதான் ஜெயிப்பாங்கலாம்...ம்ம்ம்). அல்லது பஞ்சப்பாண்டவர்கள் அணியில்  அறுவரோடு (கண்ணனோடு சேர்த்து) சேர்ந்தாலும் செஞ்சோற்றுக்கடன் மறந்தமைக்காக‌ அவனது மனசாட்சியே அவனை கொஞ்சம், கொஞ்சமாக கொன்றுவிடும். ஆக‌ 'ஆறிலும் சாவு, நூறிலும் சாவு'! (கொஞ்சம் இடித்தாலும்) மிக சுவாரஸ்யமான விளக்கம்!

அடுத்த பழமொழி அத்தனை பிரபலமானது அல்ல என நினைக்கின்றேன். அது
'சோழியன் குடுமி சும்மா ஆடாது'
என வரும். இது காரணமில்லாமல் காரியமில்லை என்ற அர்த்தத்தை தருகின்றது ('எலி ஏன் அம்மணமா ஓடுது?' என்ற உலகமகா கேள்வியின் புழக்கத்தால் இந்த பழமொழியின் புழக்கம் அவ்வளவாக இல்லை என நினைக்கிறேன்). ஆனால் இதன் உண்மையான வடிவம் இதுவல்ல எனவும், இது காலப்போக்கில் மருவி வந்த வடிவம் எனவும் எங்கள் ஆசிரியர் ஒருவர் கூறியதாக ஞாபகம். உண்மையான வடிவம்
'சோழியன் குடுமி சும்மாடு ஆகாது'!. 
இதில் வரும் சும்மாடு‍ - சுமை தூக்கும்போது அழுத்தாமலிருக்க தலைக்கு வைப்பது.(அதாங்க.. 'சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாடு இறக்கு'ன்னு 'என் ஆசை மச்சான்'ல நம்ம கேப்டன் பாடுவாரே..அதெ சும்மாடுதான்!)

இதைப்போல் இன்னும் பல இருக்கின்றன. அவை தொடர்ந்து வரும். (அடுத்தத‌யும் அரும்பாடுப்பட்டாவது நாலு மாசத்தில எழுதி முடிச்சிடணும் ;))

'மாத்தியோசி-1' இல் திரைப்படப் பெயர்களிலிருக்கும் சில சிலேடைகளை பற்றி குறிப்பிட்டிருந்தென். ஆனால் அவற்றையெல்லாம் அள்ளிச் சாப்பிடும் அள‌விற்கு தமிழ்த்திரைப்பட பெயரொன்றில் சிலேடை ஒன்று உள்ளது. அது 

'முள்ளும் மலரும்'!
'முள் + மலர்' என்பது ஒரு அர்த்தம். ஆனால் 'மலரும்' என்பதை செயலாக பார்க்கும்போது 'முள்ளும் கூட மலரும்' என்ற அர்த்தத்தில் ஒலிக்கின்றது. தலைப்பிலேயே ஒரு குட்டிக்கவிதை. இது அதுவாக அமைந்ததா அல்லது அறிந்தே வைக்கப்பட்டதா என்பது இயக்குனர் மகேந்திரனுக்கே வெளிச்சம்!

இறுதியாக....
எப்புடியெல்லாம் மாத்தி யோசிக்கிறாய்ங்க, அவ்வ்..!

'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.'                                                                                                   .

3 Response to மாத்தியோசி-2

ஜூலை 19, 2010 4:25 PM

முள் + மலர்' என்பது ஒரு அர்த்தம். ஆனால் 'மலரும்' என்பதை செயலாக பார்க்கும்போது 'முள்ளும் கூட மலரும்' என்ற அர்த்தத்தில் ஒலிக்கின்றது.
Really nice improvisation..........
Also the Ad was intriguing....

ஜூலை 19, 2010 5:13 PM
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜூலை 19, 2010 5:14 PM

Thanks Thinesh. Keep reading..!

கருத்துரையிடுக

அவசியம் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள், பின்னூட்டங்களாக‌!

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner