வெள்ளி, பிப்ரவரி 12, 2010

யாவும் நிஜம் ‍- காதலர்களுக்கு..!

2
அவளும் நானும்...!




முதல் பார்வை, முதல் வார்த்தை, முதல் ஸ்பரிஷம், முதல் கோபம்.........
அந்த முதல் தருணங்களின் தவிப்புகளையும், தத்தளிப்புகளையும் கோர்த்தெடுத்தால் 'பேரரசு' கூட காதல் படமொன்று எடுத்துவிடலாம்!

இன்றோ நொடிக்கு நொடி காதல் தான்.
நெருங்கி நெருங்கி நொறுங்கிவிடுகின்றோம்.
இரகசியங்கள் எங்கள் நெருக்கத்தில் சிக்கி செத்துபோகின்றன.
 'MEMORY CHIP'களை 'MESSAGE'களே நிரப்பிகின்றன.
ஊடலின் பொய்க்கோபங்கள் கூடலின் கண்ணீரில் சாயம்போகின்றன.
தோல்வித்துயர் அவள் மடியின் இதத்தில் தொலைந்துப்போகும்; வெற்றிக்களிப்போ அவள் உதட்டுச்சூட்டில் இரட்டிப்பாகும்!
விடுமுறை தினங்களில் தான் எங்களுக்கு முழு நாள் வேலை-காதல் அலுவலகத்தில்! 
விடிய விடிய தேடுகிறோம் 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா....' என்று!
எங்கள் அரட்டையில் வைகைப்புயலும் சரி, வெள்ளைமாளிகையும் சரி, எதுவும் தப்பிவிட முடியாது!
 A.R ரஹ்மானுக்கெல்லாம் நாங்கள் பல தடவை ஆஸ்கார் கொடுத்தாயிற்று.
எங்கள் கனவுகளின் 'டூயட்'டுகளை வைரமுத்துதான் எழுதி த‌ருகின்றார்.
அவளும் என்னைப் போலவே 'அஞ்சல....'வையும் ரசித்திடுவாள், 'அனல் மேலே பனித்துளி..'யையும் ரசித்திடுவாள்.
அவளது தந்தை எப்போதோ எனக்கு 'UNCLE' ஆகிவிட்டார்; எனது வீட்டுச்சமையலிலும் அடிக்கடி அவள் கைப்பக்குவம்!
சில்மிஷங்கள் சில ....ஓ... நேரமாகிவிட்டது. காத்துக்கிடப்பாள் அவள் -காதல் அலுவலகத்தில்...!

யாவும் கற்பனை- (என்னைப்போல்) கடலை மட்டும் போடுபவர்களுக்கு; யாவும் நிஜம்‍- காதலர்களுக்கு...!
ஆனாலும் கற்பனையில் கூட நன்றாகத்தான் இ(னி)ருக்கின்றது-காதல்..! 











திங்கள், பிப்ரவரி 01, 2010

ஆயிரத்தில் ஒருவன்‍ - புரிந்தவையும், புரியாதவையும்.

2
கொஞ்சம்(...?) தாமதான பதிவு. அனேகமாக ஆயிரத்தில் ஒருவனைப்பற்றி கடைசியாக வரும் பதிவாகக்கூட இருக்கலாம். ஏற்கனவே பல விமர்சகர்களும்  தொலைக்காட்சி சேனல்களும் படத்தை அக்கு வேர், ஆணி வேராக பிரித்து மேய்ந்து விட்டார்கள். அவர்கள் அளவிற்கு நான் 'சிந்தனை வாதி'யாக இல்லாவிட்டாலும், ஒரு சராசரி தமிழ்த்திரைப்பட ரசிகன் என்றவகையில் இத்திரைப்படத்தில் எனக்குப் புரிந்தவையும், புரியாதவையும் இதோ.....

புரிந்தவை
  • தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு திரைப்படம் 'புதுசு கண்ணாப் புதுசு'!.
  • தமிழிலும் இனி Gladiator, Pirates of the Carribean, National Treasure போன்ற படங்களுக்கு ஒப்பான படங்கள் வருமாக இருந்தால் அவ‌ற்றிற்கு இப்படம் ஒரு தொடக்கம்.
  • 'புதுப்பேட்டை' தோல்வியால் காதல் கதைக்குத்தான்  லாயக்கு என முத்திரைக்குத்தப்பட்ட செல்வராகவன், அந்தப்பெயரை உடைத்தெறிந்துள்ளார்.
  • படத்தில் சில இடங்களில் தவிர்த்திருக்கக்கூடிய லாஜிக் ஓட்டைகள். 
முக்கியமாக பிற்பாதியில் ஆண்ட்ரியா, பிரதாப்பொத்தனின் பாத்திரப்படைப்பு மற்றும் விமானத்தில் வந்திறங்கும் வீரர்கள், ஆயுதங்கள்.
  • ரீமாசென் என்ற ஒரு சிறந்த நடிகையை இவ்வளவு காலமும் தமிழ் சினிமா வீணடித்துவிட்டது. 
படத்தில் கார்த்தி, பார்த்திபன் இருவரும் கதாபாத்திரங்களாகவே மாறி உள்ளார்ந்தமான நடிப்பை வெளிப்படித்தியிருந்தாலும் அவர்களையும்  மீறி ரீமாசென் ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.  ததும்பும் இளமையில் (அம்மணிக்கு '30'தாம், பக்கத்தில் ஒருவர் சொன்னார். அப்படியா என‌ விசாரித்தால், வயசாம்...! ) அவர் போடும் ஆட்டமாகட்டும், சண்டையாகட்டும், முற்பாதியில் கார்த்தி, பிற்பாதியில் பார்த்தி என இருவருடனும் மல்லுக்கு நிற்பதாகட்டும் அம்மணி அசத்தியுள்ளார். அதிலும் பிற்பாதியில் பார்த்திபனுடனான காட்சிகளில் ஏளனம் கலந்த கோபம் , த‌ந்திரம் கலந்த தாபம் என பல பரிமாணங்கள். இவ்வளவு காலமும் இப்படி ஒரு ரீமாசென்னை நான் பார்த்ததில்லை. Hats off to Reema and Thanks to Selvaragavan.

  • சோழ மன்னனின் கதாப்பாத்திரத்தில் முன்பு பார்த்திபனுக்கு பதிலாக தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ அப்படி எதுவும் நடக்கவில்லை.
  •  இசை, ஒளிப்பதிவு, பாடல் வரிகள்  உட்பட‌ விருது கொடுக்கவேண்டிய அம்சங்கள் படத்தில் ஏராளம்.
'உளியின் ஓசை' போன்ற 'தரமான' படங்கள் எதுவும் இந்த வருடம் வெளிவராம‌லிருந்தால் கிடைத்தாலும் கிடைக்கலாம். முக்கியமாக இசை- முற்பாதிக்கும், பிற்பாதிக்கும்  காட்டப்பட்டிருக்கும் அந்த வித்தியாசத்திற்காகவே.
  • பிற்பாதிக்கு (நம்ம)தமிழ்ல்ல  உபதலைப்பு போட்டிருக்கலாம்.
அட சீரியஸாத்தாங்க..! பிற்பாதியில் பல சம்பாஷணைகளின் சாராம்சம் விளங்கினாலும் பல சொற்களின் அர்த்தம் என் தமிழ்ப்புலமைக்கு(......?) எட்டவேயில்லை. ஆனாலும் அந்த தமிழ்ச்செறிவும், உச்சரிப்புகளும் உள்ளுக்குள் ஒரு இன‌ம்புரியாத சிலிர்ப்பை ஏற்படுத்துவது அவற்றின் வெற்றி.

புரியாதவை.
  • நான் பார்த்த படம், முழுதான படமா அல்லது நீளம் காரணமாக சில காட்சிகள் வெட்டுப்பட்ட படமா?
பலர் விமர்சித்திருந்த ரீமாசென் சம்பந்தப்பட்ட‌ காட்சிகள்  இருக்கவில்லை, ஆனால் 'நெல்லாடிய நிலமெங்கே..' பாடல் இருந்தது (நீளம் காரணமாக இந்தப்பாடல் தூக்கப்பட்டிருந்ததாக‌ அறிந்தேன்).
  • பிற்பாதியின் சம்பாஷணைகளில் இடம்பெறும் பல 'தமிழ்'ச்சொற்கள்.
  • இந்த சொற்களைத் தவிர, பிற்பாதி முழுதுமே புரியவேயில்லை என்று கூறுபவர்களுக்கு அப்படி என்ன புரியவில்லை என்பது.
  • ஹிட்டான பல சராசரிப்படங்ளின் லாஜிக் மீறல்களை சல்லடைக்கண்களில் பார்த்துவிட்டு 'ஆஹா..ஓஹோ' என்றுவிட்டு, இப்படியான ஒரு தமிழ்ப்படத்தின் லாஜிக் மீறல்களை அதெ கண்களில் விள‌க்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பதோடு அதையே தூக்கிப்பிடித்துக்கொண்டு  விமர்சிப்போரின் நோக்கம்.
  • Gladiator, Pirates of the Caribbean, National Treasure போன்ற படங்கள் ஹாலிவூட்டில் வரும்போது இப்படியான படங்கள் தமிழிலும் வராதா? என வெளிப்படையாக‌வே ஏங்கிவிட்டு , அப்படியான முயற்சிகளுக்கு வித்திடும் இந்த மாதிரியான ஒரு படத்தின் நிறைகளை விட்டுவிட்டு, நானும் ஒரு குறைக்கண்டு பிடித்துவிட்டேன் என மார்தட்டிக்கொள்ளும் சில விமர்சகர்களின் அந்த அதிமேதாவித்தனத்தின் நோக்கம்.
  • (ஊடக தர்மத்துடன் தொழிற்பட வேண்டிய‌)  தொலைக்காட்சி சேனல்களில் சில‌, இந்த படத்தை பாடாய்ப்படுத்துவதன் பின்னணி.
சமீபத்தில் ஒரு சேனலின் தரவரிசையில் ஆயிரத்தில் ஒருவன்‍‍ நான்காவதாம். முதலாவது‍‍ ஆதவனாம் (நூறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பாதாலாம்). படத்தின் பாடல்களுக்கும் இதே நிலைமை. கொடுமை என்னவென்றால் கந்தக்கோட்டை படப்பாடல்கள் கூட முந்திக்கொண்டு நிற்பதுதான். அது சரி, காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சாகும்போது கலைஞருக்கு....?

இதையும் சேத்துக்குங்கோ.....

'ஆயிரத்தில் ஒருவன்‍ பகுதி II' கதை ரெடியாக இருக்கிறதாம். கட்டாயம் அதுவும் வெளிவருமாம். (சில அறிவு ஜீவிகளின் ஒருதலைப்பட்சமான‌  விமர்சனங்களால் இந்த முயற்சியை செல்வராகவன் கைவிட்டு விடாமல்  இருந்தால் சரி.)

சமீபத்தில் விஜய் டீ.வியில் ஆயிரத்தில் ஒருவன் அலசல் ஒன்று  இடம்பெற்றது. சுவாரஷ்யமான அந்த உரையாடலில் செல்வராகவன், கார்த்தி, பார்த்திபன், 'நீயா, நானா' கோபி நாத் மற்றும் ரசிகர்கள் கலந்துக்கொண்டனர். இதில் படத்தின் குறை, நிறைகள் பற்றி அலசப்பட்டுக்கொண்டிருந்தபோது கம்பியூட்டர் கிராபிக்ஸ் பற்றிய கதை வந்தது. செல்வராகவன், 'கார்த்தி உண்மையில் கையில் பிடித்தது பாம்ப‌ல்ல, கட்டையைத்தான்' எனறவுடன் கார்த்தி முகத்தில் ஒரு வெட்கம் கலந்த ஏமாற்றம். அவ‌ரும் உடனே தான் பாம்பை பிடிப்பதற்கு தயாராகத்தான் இருந்ததாகவும், செல்வா தான் வேணாமென்று கூறியதாகவும் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுக் கூற அது வரை அமைதியாக இருந்த பார்த்திபன் ஒரு நச் கமென்ட் அடித்தார்
' கார்த்தி இரண்டு பாம்பை பிடித்த‌து உண்மைதான். ஒன்று ரீமாசென், மற்றது ஆண்ட்ரியா'.
இது தான் பார்த்திபன் குசும்பு.

இதோ அந்த நிகழ்ச்சி....
















Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner