ஞாயிறு, ஜூன் 12, 2011

அதிகாலை அவஷ்தைகள்!

14


10.00,10:01,10:02..சுவர்க்கடிகாரம் இரவை அளந்துக் கொண்டிருந்தது. இப்படியே கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடுமாம் எப்போதோ அம்மா சொல்லித்தந்தது. சில நேரங்களில் நடப்பதுமுண்டு. ஆனால் இப்போது நடக்கவில்லை. மொபைலை எடுத்தேன். அலாரம் 3.45AM எனக்காட்டியது. எரிச்சலாக இருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு அதிகாலையில் பயணம் செய்யவேண்டிய கட்டாயம். நான் அதிகாலையில் பயணம் போவது கங்குலி IPL விளையாடுவது மாதிரி. சரிப்பட்டே வந்ததில்லை. ஒன்று விடிய, விடிய தூக்கத்தோடு போராட்டமே நடத்த வேண்டியிருக்கும், இல்லை அலாரத்தையும் தாண்டி தூங்கிப் பின் அரக்க பறக்க புற‌ப்பட வேண்டியிருக்கும். எனக்கே தெரியாமல் அலாரத்தை Off செய்துவிட்டு தூங்கிய அனுபவங்கள் கூட உண்டு. நாளை எப்படியோ யோசித்துக்கொண்டே 'சிட்டி' ஐ தேடினேன்.கட்டிலுக்கு பக்கத்தில் நிம்மதியாக துங்கிக்கொண்டிருந்தது. ['சிட்டி' என்றால் ரோபோ அல்ல, எங்கள் வீட்டு நாய்.. உதிரித்தகவல்: அந்த சிட்டிக்கும் , இந்த சிட்டிக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அது என்ன சொன்னாலும் கேட்கும் , இது என்ன சொன்னாலும் கேட்காது ;-)] மீண்டும் கடிகாரத்துக்கே வந்தேன்.  கண்கள் இலேசாக செருகத்தொடங்கின.
*************
'வவ் , வவ் '... 'சத்தத்தில் விழித்தேன், 'சிட்டி' எதற்காகவோ குரைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் கலைந்தது. நேரம் 3.40AM . அலாரம் அடிக்க இன்னும் 5 நிமிடமே இருந்தது. 'சிட்டி'யை சந்தோஷத்துடன் பார்க்க அது என் காலை நக்கத்தொடங்கியது. தலைமாட்டில் வைத்த மொபைல், கட்டிலிக்கும் ,இடுப்பிற்குமிடையில் செருகி அவஷ்தைப்பட்டுக்கொண்டிருந்தது. எடுத்து அலாரத்தை 'Off' செய்து விட்டு வாழ்க்கையிலே முதன் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அதிகாலைப்பயணத்திற்கு ஆயத்தமாக தயாரானேன்.
*************
4.30AM. 'AXE'இன் நறுமணத்தை உடம்பில் வாங்கிக்கொண்டேன். 'AXE'ஐ பாவிக்கும் போதெல்லாம் அதன் T.V விளம்பரங்கள் கண் முன்னே வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை. கூடவே ஒரு சிரிப்பும் வரும். ;-)




ஒரு ஆனந்த விகடன், மொபைல் நிறைய MP3, கண்ணில் மிச்சமிருந்த தூக்கம்... நான்கு மணி நேர பயணத்தை ஓட்டிவிடலாம் என எண்ணிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தேன். வழமையாய் குண்டூசி சத்தத்திற்கே 'திடுக்கிட்டு' எழும் அம்மா இன்று அதிசயமாக தூங்கிக்கொண்டிருந்தார். எழுப்ப மனம் வரவில்லை. வாலை ஆட்டிக்கொண்டே 'சிட்டி' வாசல் வரை வந்தது. கதவை பூட்டிவிட்டு தெருவிற்கு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அதிகாலையில் தெருவில் இப்படி ஆறுதலாக நடப்பது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 'சிட்டி'க்கு நன்றிச் சொல்லிக்கொண்டேன். 
**************
10 நிமிடத்தில் பஸ் நிறுத்தத்தை அடைந்தேன். காத்திருந்த 10 நிமிடத்தில் ரஜனியின் உடல்நிலையில் தொடங்கி சனத்தின் மனநிலை வரை மனம் பல விஷ‌யங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தது. அத்தனையையும் துரத்தியடித்துக்கொண்டு 'இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' வந்து நிறுத்திய போது நேரம் 5.00. ஏறினேன், எதிர்ப்பார்த்ததைப் போலவே இருக்கைகள் பல காலியாக இருந்தன. அதிகாலையில் பயணம் செய்வதில் இருக்கும் வசதிகளில் ஒன்று. ஜன்னலோர இருக்கையொன்றில் போய் இருந்துக்கொண்டேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது வசதியாக இருந்தது. முதல் வேலையாக‌ காதுகளில் 'ஹெட் செட்' டை செருகி, MP3 பிளேயரை தொடக்கினேன் 'வாழ்க்கை ஒரு போர்க்களம்...' என காதுகளில் கதறியது என்னவோ செய்ய 'ஹரிஷ் ஜெயராஜ்'க்கு தாவினேன். 'எங்கேயும் காதல் .. ' என இதமாக ஆரம்பிக்க அப்படியே சாய்ந்தேன். எல்லாமே சரியாக நேரத்திற்கு போய்க்கொண்டிருப்பது எங்கோ ஏதோ செய்தது.
****************
5 :05, 5 :10, 5 :15... கண்கள் மெதுவாக செருக ஆரம்பித்த வேளை 'எக்ஸ்கியுஸ் மீ ' என ஹரிஸையும்  தாண்டி செவிகளில் தென் பாய்ச்சியது ஒரு குரல். கண்கள் அனிச்சையாகவே திறக்க அருகே ஒரு 'ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி' பக்கத்து இருக்கையை கேட்டுக்கொண்டு நின்றது! பஸ்ஸில் வேறு சில இருக்கைகளும் காலியாகத்தான் இருந்தன. 'கண்ணா ல‌ட்டுத் தின்ன ஆசையா' யாரோ கேட்டதைப்போல் இருந்தது. நான் சற்று விலக, பக்கத்து இருக்கை அவளை தாங்கிக்கொள்ளும் பாக்கியம் பெற்றது. என்னைப்பார்த்து இலேசாக சிரித்தாள். அவள் கன்னத்துக்குழி யாரோ ஒரு புது நடிகையை ஞாபகப்படுத்தியது. எதற்காகவோ எழும்பினாள். இறுக்கமான் டீஷேர்ட்டும், ஜீன்ஸும் அவள் வளைவு நெளிவுகளை அந்த மங்கலான வெளிச்சத்திலும் அம்பலப்படுத்தின. பார்வை அவளை விட்டு அகல மறுத்தது. கண்களை அவள் ஆக்கிரமித்துக்கொள்ள காதுகளை ஆலாப் ராஜா ஆக்கிரமித்தார் 'என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்....' என..!
*************


5.20, 5.25,5.30... அவள் அருகாமை தூக்கத்தை துரத்தி விட்டிருந்த‌து. 'நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..' திரும்பத் திரும்ப 'என்னமோ ஏதோ...'வையே மன‌ம் விரும்பியது. யார் நெருங்குகிறோம் விளங்கவில்லை, ஆனால் எங்களுக்குள் இடைவெளி குறைவது மட்டும் நன்றாக விளங்கியது. ஒரு 'ஹலோ' சொல்லலாம் என 'சுவாமி நித்தியானந்தா'வை ;-) வேண்டிக்கொண்டு மனதில் ஒத்திகைபார்க்க ஆரம்பித்த வேளை, தோளில் தென்றல் மோதியதைப்போல ஒரு உணர்வு. திரும்பியபோது.. [மக்கள்ஸ் உங்கள் மனதை திடப்படுத்திக்கொள்க...! ;-)] அவ‌ள் என் தோளில் சாய்ந்து தூங்கிகொன்டிருந்தாள். 'கண்ணா ரெண்டாவது லட்டுத்தின்ன ஆசையா..?' ஆலாப் ராஜாவே காதுக்குள் கேட்டார். 'AXE EFFECT' வேறு ஜாபகத்திற்கு வந்து தொலைத்தது. சுதாகரிப்பதற்குள்ளே நிமிடங்கள் பறந்திருந்தன. அவள் 'ஷாம்பு' வாசம் நாசியில் நுழைந்து உயிரை கபளீகரம் செய்துக்கொண்டிருந்தது. இன்ப நிமிடங்கள் இம்ஷித்துக் கொண்டிருந்தன. அவளோ மேலும் மேலும் நெருங்கினாள், நானோ மேலும் மேலும் நொறுங்கினேன். அடுத்தது என்ன..... என் கழுத்தில் அவள் இதழின் ஈரத்தை உணர ஆரம்பித்தேன். என் வறண்ட உதடுகளில் வார்த்தைப்பஞ்சம் ! எப்படியோ சுதாகரித்துக்கொண்டு 'ஹலோ..' என்றேன் அவள் காதுகளில் மெதுவாக‌...! அதற்கு அவள்....... 'வவ் , வவ் '...குரைக்கத்தொடங்கினாள்...!
**********




'சிதம்பரச்சக்கரத்தை பார்த்த பேயை' பற்றி அறிந்து வைத்திருந்தேன். இப்போது அதை முழுவதுமாக அனுபவித்தேன். அதுவும் அரைத்தூக்கத்தில்...! அதையெல்லாம் பொருட்படுத்தாது 'சிட்டி' என் கழுத்தை நக்குவதிலே தீவிரமாக இருந்தது. கழுத்தின் ஈரத்திற்கு உண்மையான காரணம் உணர்ந்தேன். 'வவ், வவ்' மீண்டும் குரைத்தது. தூக்கம் முற்றாக கலைந்தது. நேரத்தை பார்த்தேன். அதிகாலை 5 மணி! மொபைலை எடுத்துப்பார்த்தபோது அலாரம் 'Off' செய்யப்பட்டிந்தது. அடுத்து ................. வேறென்ன எழும்பி மீண்டும் 'வழமையான' ஒரு அதிகாலைப் பயணத்திற்கு அரக்கப் பறக்க ஆயத்தமானேன்.
************
முற்றும்..! (அனால் ஒன்று அதிகாலை கண்ட கனவு பலிக்குமாம். :-P)

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner