வியாழன், ஜனவரி 21, 2010

பாட்டு செம‌ சுவீட்டு - மெல்லினமே, மெல்லினமே...

0
என்னதான் குத்துப்பாடல்களும் தத்துவப்பாடல்களும் பட்டி, தொட்டி எங்கும் பட்டையை கிளப்பினாலும் மெல்லிய காதல் பாடல்கள் தான் நம் மனதில் ஏறி அமர்ந்துக் கொள்ளுகின்றன . அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பல மெல்லிய காதல் பாடல்களை கேட்கும்போதே நான் 'என் வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாத அந்த உருண்டை உருள' உணர்ந்திருக்கின்றேன்  ( 'யூத்'தாக்கும்   ஹி..ஹி.. ).

அப்படியான பாடல்களில் ஒன்றுதான் ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மெல்லினமே, மெல்லினமே....' என்ற பாடல். ஒருதலைக்காதலின் சுகம், சோகம் இரண்டையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடல்கள் மிகக்குறைவு.  என்னதான் இந்தப்பாடல் சோகப்பாடல்களின் வரிசையில் வராவிட்டாலும், பாடலில் அங்கங்கே இழையோடும் சோகத்தில் கவிஞர் வாழ்ந்திருக்கின்றார்.



'மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்...'

மெல்லினமே என்று தமிழையும், மென்மையையும் கலந்துக்கட்டி காதலியை அழைக்கும் அந்த முதல் வரி, 'வைரமுத்து டச்'!


'என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி...'
காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சாகும்போது, காதலனுக்கு? அடுத்த வரியிலேயே அந்த உயரத்தை அளந்தும் கொடுக்கின்றார்.
'அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்'
பூக்கும், பார்க்கும் - பொருளில் மட்டுமில்லை, வார்த்தைகளிலும்  விளையாடுகிறார் கவிஞர்.

'நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்...'

ஏக்கமா, வியப்பா? காதலில் விழுந்த அந்த நொடியில் புதிதாய் பிறக்கின்றான், இருபத்தைந்து வயதை இழக்கின்றான்.
இழுத்தாய், அடைத்தாய்-அந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது.

'வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி'

புயலிலும் சாயாத வேர்கள், பட்டாம் பூச்சியால் சாய்ந்ததாக தன் ஏக்கத்தையும், வியப்பையும் தொடர்கிறான் காதலன். ஏன் வேர்? வேரில்லாமல் வேறில்லையே...வேரையே சாய்த்துவிட்டாள். இனி என்ன செய்வது!

'எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி'

ஒவ்வொரு காதலனுக்கும் காதலை சொல்வதில் உள்ள தயக்கத்தையும் இயலாமையயும்  உணர்த்தும் வரிகள்.

'கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக'

கனவுப் பூவே....உண்மை தான். ஒருதலை காதலனுக்கு அவன் காதலி 'கனவுப்பூ'தானே, நேரில் என்ன செய்ய முடியும்?
காதலை சொல்ல அவனால் முடியவில்லை. அவளாக வரவேண்டுமாம், இதயத்தை பரிமாறிக்கொள்ள!

'மண்ணைச்சேரும் முன்னே அடைமழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..'

ஆஹா, இப்படித்தானே இருக்க வேண்டும் உவமை. எவ்வளவு எளிமையான வரிகள். குழ‌ந்தைக்கும் புரியும்.
'முன்னே', 'பின்னே' என  வார்த்தைக் கோர்வைகள் காதில் தேனாக பாய்கின்றன.

'வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்'

காதல் ஏற்படுத்தும் மாற்றத்தையும், மென்மையையும் இதை விடவும் அழகாக கூறி விட முடியுமா, இரண்டே வரிகளில்?

கடைசி வரிகள் தான் இந்தப் பாடலின் 'MASTERPIECE'.
'பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதுமில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறை
வதும் இல்லை '
உவமையின் உச்சம். நான் முன்பே கூறியது போல் இந்த வரிகளின் பின்னே இழையோடும் சோகம், நம் மனதிலும் குடிகொள்கின்றது. இதுவே இந்த வரிகளின் வெற்றி.

பாடல் வரிகளின் தொடர்ச்சித்தன்மையில் ஒரு குட்டிக்கதையையே கவிஞர் சொல்லிமுடித்திருப்பதை உணரலாம், முடிவு உட்பட‌ (படக்கதையும் கிட்டத்தட்ட அதுவே). பாடலை முழுமையாக கேட்டு முடிக்கும் போது கடற்கரை வெயிலோடு, ஈரமான கடற்காற்றையும் சேர்த்து அனுபவித்தது போன்றதொரு உணர்வு. உங்களுக்கும் அப்படித்தானே...?

இதையும் சேத்துக்குங்கோ...
  • இந்த‌ பாடல் எனக்கு பிடித்தமைக்கு வரிகளை சிதைக்காத, மறைக்காத இசை வழங்கியிருந்த‌ மணிசர்மாவும், கவிஞரோடு சேர்ந்து வாழ்ந்திருந்த பாடகர் ஹரிஸ் ராகவேந்திராவும் கூட முக்கிய காரணங்கள்.
  • பாடலுக்கான காட்சிப்படுத்தலும் கூட வரிகளுக்கேற்ப‌ இருந்தது. ஒளிப்பதிவு, லொகேஷன் மற்றும் ரிச்சா பல்லோட்- அனைத்தும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக விஜய். அந்த‌ ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகளும், அவருக்கேயுரிய குறும்பும், குழந்தைத்தனமும் கலந்த முகபாவனைகளும் -ஒரு  ஹைக்கூ. (இப்ப‌ எங்க சார் போய்த்தொலஞ்சீங்க?)
  • இது என்னதான் அருமையான பாடலாக இருந்தபோதும் படத்தில் பெரிய‌ ஹிட் ஆனது என்னவோ 'சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்' என்ற குத்துப் பாடல் தான். இதற்காக சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கூட 'இங்கே' கவலைப்பட்டிருந்தார்.

இதோ பாடல்.....







செவ்வாய், ஜனவரி 12, 2010

உன்னைப்போல் ஒருவனும், வேட்டைக்காரனும்!

5

கூடையிலிருந்து நழுவி விழுந்த தக்காளியை பொறுக்கிக்கொண்டிருந்த உன்னைப் போல் ஒருவன் குதிரை கனைக்கும் சத்தத்தைக்கேட்டு தாடியை சொறிந்துக்கொண்டே நிமிர,  இடுப்பில் ஒரு கை, கௌபாய் தொப்பி, பட்டன் தைக்காத சட்டை என வித்தியாசமான கெட்டப்பில் மணிக்கு 100 km வேகத்தில் குதிரையை,  இல்லையில்லை குதிரையில் யாரையோ விரட்டிக்கொண்டு வந்தவர்.......ஆங் அவரே தான்,  வேட்டைக்காரன்!

'உ.போ.ஒ' ஐ பார்த்தவுடன் தன் முயற்சியை கைவிட்டுவிட்டு 'வே.கா', குதிரையிலிருந்து கீழே குதிக்க, தப்பினோம், பிழைத்தோம் என குதிரை கதறிக்கொண்டே  ஓடி மறைகிறது.

வே.கா: வணக்கமுங்கண்ணா....

உ.போ.ஒ: ஆ.. நீங்களா, என்ன தோப்பியெல்லாம் வச்சு , பூப்போட்ட சட்டையெல்லாம் போட்டு அடையாளமே தெரியல.

வே.கா: இது தானுங்கண்ணா என்னோட புது கெட்டப்பு.
படம் பிச்சுக்கிட்டு ஓடுதே...இன்னும் பாக்கலீங்களாண்ணா?

உ.போ.ஒ: (சன் டி.விக்காரன் தொல்லதான் தாங்க முடியலன்னு வெளிய வந்தா, இங்கயுமா என முனகிக்கொண்டே) பார்க்கத்தான் போனேன். ஆனா பாதிலேயெ எழும்பி வந்துட்டேன். அதான் நீங்க போலிசாக ஆசைப்படுறதா யாரோ படத்துல சொல்லுவாங்களே, எங்க அப்படி எதும் நடந்துறப்போகுதோங்குற பயந்துல எழும்பிவந்துடேன்.

வே.கா: (சற்று கடுப்பாக) அது பாதி இல்லைங்கண்ணா, ஆரம்பமே அதான். நீங்களாவது பரவால்லைங்கண்ணா. நான் உ.போ.ஒ பார்த்து பாதிலயே தூங்கிட்டேன். ஒரு குத்து பாட்டு இல்ல, ஒரு டூயட் இல்ல...
அப்படி என்ன.....என்ன...என்ன சொல்ல வாறீங்க?
என்ன பாருங்க, என்னா பைட்டு, என்னா டான்ஸ்....அதுல பாருங்கண்ணா டைரக்டர் என் 'ச‌ன்'னும் என்னோட சேந்து நடிச்சா, இல்லல்ல‌ ஆடுனா 'நல்லாருக்குன்னு 'feel' பண்ணுனார். நானும் அடுத்த நாளே 'ச‌ன்'னோட போய் நிக்க என் கமிட்மென்ட‌ பாத்து அப்டியே ஆடி...ஆ..டி போய்ட்டாருங்கண்ணா...

கேட்டுக்கோண்டிருந்த உ.போ.ஒ  வழிந்தோடிய‌ கண்ணீரை   துப்பாக்கியாலே துடைக்க,  வே.கா விடுவதாயில்லை

வே.கா: அதுல பாருங்கண்ணா, ட்ரயின்ல அனுஷ்காவோட லவ் சீன் ஒன்னு வச்சிருக்கோம், யூத் மனசையெல்லாம் அப்படியே டச் பண்ணிரும்...

உ.போ.ஒ உம் ஏதோ 'முத்த‌' சமாச்சாரமோ என 'அனுஷ்காவுக்கேவா' என்பது போல் கண்ணாடியை துடைத்துக் கொண்டு பார்க்க‌.

டிரயின்ல வச்சு அப்படியே அவ்ங்க வளையல திருடி, அத அவங்க ஞாபகச்சின்னமா வச்சிருக்கேன், ஆனா அத அவங்க கண்டுப்பிடுச்சுறாங்க. சீன் ரொம்ப வித்தியாசாமா இருக்கதா சன் டி.வில சொல்றாங்க‌.  அநியாயத்தக் கண்டா வேட்டைக்காரன், அனுஷ்காவக் கண்டா சேட்டைக்காரன்னு ஒரு பன்ச் வச்சிருக்கணும் . Just misssuங்கண்ணா.

உ.போ.ஒஅதற்கு மேல் தாங்க‌ முடியாமல்,

நான் ஒரு காமன் மேனாக சொல்றேன், இந்த வேட்டையும் சேட்டையும் எத்தனை நாளைக்கு தமிழர் ரசிப்பாங்க‌? தமிழர் எல்லோரும் விரும்புற‌து உலகத்தரம். இதயே தான் கலைஞர் அய்யாவும் கடைசியா அவருக்கு நடந்த பாராட்டு விழாவுல சொன்னாரு.உலகத்தரம்னா டான்ஸும் பைட்டும் தேவ‌ல்ல.  முதல்ல லாஜிக் இருக்கணும். மாறணும் எல்லாம் மாறணும்.

தொடங்கிட்டார்ரா இவரு, உலகத்தரம், உலக்கைத்தரம், லாஜிக், மேஜிக்கினுக்கிட்டு என முணுமுணுத்துக்கொண்டே வே.கா,

'அண்ணா, அங்க மட்டும் என்னங்கண்ணா லாஜிக் வாழுது. ஒரு தக்காளியக்கூட‌ விடாம பொறுக்குவீங்களாம். ஆனா லப் டாப்பு, மொபைல் எல்லாத்தயும் போட்டு கொளுத்துவிங்களாம். நல்ல காமன் மேனுங்கண்ணா நீங்க.'

உ.போ.ஒ:  நா என்ன சொல்றேன்னா, காதுல இந்த மாதிரி சின்ன சின்னதா பூ சுத்தலாம், ஆனா உங்கள மாதிரி புடலங்காய சுத்தக்கூடாது. காதும் தாங்காது, கண்ணும் தாங்காது.
இப்ப பாருங்க, சும்மா இருந்த நிறைய பேர் உங்களால கண்ணுக் கெட்டுப்போய் விமர்சனம் எழுதுறேங்கற பேரில எழுதி, எழுதி இப்ப தூண், துரும்பு எல்லாத்திலயும் நீங்கத்தான் தெரியுறீங்க‌. கடைசியா விஜயகாந்த் சோன்ன  புள்ளி விபரத்துல...
உங்களோட SMS ஜோக்‍ 189
உங்களோட E-MAIL ஜோக்‍ 216
வே.கா விமர்சனம் 1116, இதுல 1000த்துக்கு மேல நையாண்டி விமர்சனம்.
இதெல்லாம் தேவையா? இப்படியே போனா நான் காமன் மேன் ஆன மாதிரி நீங்க காமடி மேன் ஆகிடுவிங்க.

வே.கா: அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜங்கண்ணா. உங்களப்பத்தி கூடத்தான் டெல்லி கணேஸ் மாதிரி ஒருத்தர் நடிக்கவேண்டிய 'ரோல்'ல‌ நீங்க நடிச்சுட்டதா யாரோ ஒரு ஞானி நக்கலா சொல்லிருந்தாரே. வாசிக்கலயாங்கண்ணா...

உ.போ.ஒ: நான் விமர்சனங்களை படிப்பவன், விஷமத்தனங்களை அல்ல; விமர்சகர்க‌ளை மதிப்பவன், விஷமிகளை அல்ல. ஞானி என்பவன் முற்றுமுணர்ந்தவன். தன்னைத்தானே ஞானி என்று..... 

அப்போது அங்கே வந்த ரசிகர் கூட்டம் உ.போ.ஒ ஐ அடையாளம் கண்டு சூழ்ந்துக்கொள்ள, கண்டுக்கப்படாததால்  கடுப்பாகிய வே.கா அவருக்கேயுரிய பாணியில்
'ஹே, சைலன்ஸ்... பேசிக்கிட்டுருக்கோமுல்ல'.
என அலற, ரசிகர் கூட்டம் சிதறி ஓடுகிறது, காதில் வடிந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே.

கண்களில் கொலைவெறியுடன் நின்ற வே.கா பார்த்து பயந்து சற்று தள்ளி நின்று உ.போ.ஒ தொடர்கிறார்...
'சரி அத விடுவோம். அடுத்ததா என்னப் பண்ணப்போறீங்க?'

வே.கா: அப்டி கேளுங்கண்ணா, அடுத்து என்னோட அவதாரம் சுறா...சண்டன்னு வந்தா சுறா; சாந்தமானா புறா. இது எப்டி இருக்கு
என கையையும், காலையும் உதறி ஏதோ சேய்து காட்ட‌...

உ.போ.ஒ: சுறாவோ, புறாவோ... ஒன்னு மட்டும் நிச்சயம், இப்பிடியே போனா உங்க ரெண்டு படத்தை வச்சு 'குறைந்தபட்சம் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க'ன்னு போட்டியே நடத்திடுவாங்க. .

வே.கா: அதுக்காக‌த்தாங்கண்ணா அதுல ரொம்ப வித்தியாசமா வழமையான‌ 3 நாள் தாடிய, 5 நாள் தாடியாக்கப்போறேன். அதோட சேர்ட்டே போடாம‌ வெறும் பனியனோட வரப்போறேன். பார்க்கிறவனெல்லாம் அப்படியே அதிரப்போறான். சுறாவக் கண்டு கை, கால் மட்டும் இல்ல 'த‌ல'யே நடுங்கப்போகுதுங்கண்ணா.

என்று சொல்லிமுடிக்கவும் உ.போ.ஒ துப்பாக்கி வெடிக்கவும் சரியாக இருந்தது.

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உ.போ.ஒ சரிந்து விழுந்த பிறகும் கூட‌ வே.கா  பன்ச் தொடர்கிறது. 

 'வேட்டைக்காரன் அடிச்சும் கொல்லுவான், கதச்சும் கொல்லுவான். அடுத்தது யாரு, வேற.....வேற........... '

சத்தத்தை கேட்டு மக்களோடு  மக்களாக‌ நாய், பூனைகளும் சிதறி ஓட, பின்னால் ஒலிக்கிறது.

'ஏ...ஓடு, ஓடு, ஓடு, ஓடு  வேட்டக்காரன் வாற‌தப் பாத்து...'

பி.கு: உ.போ.ஒ, வே.கா இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு என் மனதில் தோன்றிய எண்ணங்க‌ளின் பிரதிபலிப்பே இந்த சந்திப்பு. வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. முக்கியமாக மற்றவர்களைப்போல் 'வே.கா' ஐ நக்கலடிக்கும் நோக்கம் இல்லவே இல்லைங்கண்ணா.  ஹி..ஹி...!







Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner