வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 07, 2013

கவிப்பேரரசு வைரமுத்துவின் 'பரதேசி'!

4

'கடல்' திரைப்பட‌  பாடல்கள் அடைந்த உச்சத்தில் ஏனைய பல நல்ல பாடல்கள் பெரிதாக கண்டுக்கொள்ளப்ப‌டவில்லை என நினைக்கின்றேன். குறிப்பாக 'பரதேசி' படப்பாடல்கள். இசையைப் பற்றி எனக்கேதும் பெரிதாக அறிவில்லை. நான் முதலில் ரசிப்பது பாடல் வரிகளைத்தான். பின்னர் தான் இசை, குரல் எல்லாம். கடல் பாடல்களின் இசை எல்லோரையும் போல என்னையும் வசீகரித்திருந்தாலும் பாடல் வரிகளை 'ஆஹா, ஓஹோ' என்று புகழமுடியவில்லை, வைரமுத்துவின் தீவிர ரசிகனாக இருந்தும் கூட . சில வேளை அதுவே அளவுக்கதிகமான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி பாடல்களில் திருப்தியின்மைக்கு காரணமாகியிருக்கக்கூடுமோ என எண்ணத்தோன்றுகின்றது.  மூன்று பாடல்களிலுமே வைரமுத்துவின் முத்திரை வரிகள் கொஞ்சம் குறைவு என்பது என் எண்ணம். குறிப்பாக 'மூங்கில் தோட்டம்..' பாடலில் கவிப்பேரரசு இன்னும் புகுந்து விளையாடியிருக்க வேண்டும். (மகன்/ம‌தன் கார்க்கிக்காக கொஞ்சம் அடக்கி வாசித்துவிட்டாரோ?). அது எப்படியோ போகட்டும். ஆனால் 'பரதேசி' பாடல்களில் அதே கவிப்பேரரசு ஒருக் காட்டு காட்டியிருக்கிறார். (கண்டுக்காதீங்க‌-, டாக்டர் 'விஜய்' படங்கள் அதிகம் பார்ப்பதன் விளைவு.). சிலப் பாடல்களைக்கேட்டு விட்டு இது இன்னார் பாடியது எனக் கூற முடிவதைப்போல வைரமுத்துவின் பல‌ பாடல்களின் வரிகளை கேட்டாலே சொல்லிவிடலாம் இது வைரமுத்து எழுதியது என்று. அவ்வாறான பல வரிகளை 'பரதேசி' பாடல்களில் காணலாம்.
முதலில் 'அவத்தப்பையா, செவத்தப்பையா..' பாடலிலிருந்து
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

'செரட்டையில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க' என்ற வரிகள்.

காதல் தரும் நிறைவையும், நெருக்க‌த்தையும் நான்கே வரிகளில், நச்சென! உவமைகளால் கோர்க்கப்பட்ட வரிகள். ஒரு ஏழை காதலைப் பாட நினைக்கும்போது காரும் பங்களாவும் கண்களில் தோன்றுவதில்லை. எனவே உவமையை செருகவ‌திலும் தர்க்கம் இருக்கவேண்டும். அங்கு தான் வைரமுத்து நிற்கிறார். 'செரட்டையில் பேஞ்ச சிறுமழை', 'கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு' என அவர்களின் தினசரி வாழ்க்கையிலிருந்தே உதாரணம் கோர்க்கிறார்.

அத்தோடு நிக்காமல் அதை பின்வருமாறு முடிக்கிறார்.

'நம்ம பூமி வறண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைஞ்சிருக்கு'

இந்தப்பாடலில் எனக்குப்பிடித்த வரிகள். வாழ்க்கைத்தத்துவத்தை விவகாரமாக‌  இப்படி இரண்டே வரிகளில் எத்தனைப் பேரால் எழுதிவிட‌ முடியும்?

அடுத்தப்பாடல்....
'ஹோ... செங்காடே சிறுகாடே போய் வரவா'
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

கொஞ்சம் 'விடை கொடு எங்கள் நாடே' (கன்ன‌த்தில் முத்தமிட்டால்) வகையறாப் பாடல். (அப்போது அந்தப் பாடல் கேட்டு கலங்காத‌ இலங்கைத்தமிழர் மிக சொச்சம்.)

'வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலப் போல
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு'

கொக்குக்கால்‍‍ - வத்திப்போன வாழ்வு. ஏற்கெனவே கூறியதைப்போல வைரமுத்துவின் உவமைக்கு இன்னொரு உதாரணம்!

இந்தப்பாடலில் என‌க்கு மிகப்பிடித்த வரிகள்...

'உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிறோடு வாழ்வது தானே பெரும் துன்பமே'

இதைவிட அழகான, ஆழ‌மான பசியைப்பற்றி பாடல் வரிகள் குறைவு என நினைக்கின்றேன். இந்த வரிகளை மதுபால கிருஷ்ணனின் குரலில் கேட்கும்போது மனம் ஒரு நிமிடம் கலங்கும். அது தான் அவ்வரிகளின் வெற்றி.

அடுத்து 'யாத்தே கால கூத்தே...'!
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

'ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை'

செவிட்டில் அறையும் வரிகளில் கசப்பான உண்மை!

இந்தப்பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்...

'வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான் ஏழையின் தாய்மொழி'

எளிமையான வரிகள், வலிமையான உண்மை!

அடுத்தப்பாடல்  'செந்நீர் தானா செந்நீர் தானா'!
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

இன்னொரு சோகப்பாடல்!

இந்தப்பாடலில் எனக்குப்பிடித்த சில வரிகள்...

'நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கைக்கூலி காயம் தானா?'

வேறு என்ன சொல்ல....வைரமுத்துவின் முத்திரை குத்தப்பட்ட இன்னுமொரு வரி!

'ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர்ச்சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே'

பூர்வீக போர்வை‍ ‍ - காலங்காலமாக ஒரே போர்வையை பாவிக்கின்றமையை இப்படி சொற்பிரயோகத்தில் உணர்த்துவ‌து - வைரமுத்து டச்!

'எங்க மேலு காலு வெறும் தோலா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே'

மீண்டும் வைரமுத்திரை!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை வடித்தெடுத்த சில வரிகள் மட்டுமே. பாடல்கள் முழுக்க இப்படி ஏராளமான விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன. ஆனால் என்னவொன்று, பெரும்பாலானவை சோகப்பாடல்கள். 'பாலா' படம்தானே அப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தப்பாடல்கள் எனக்கு மிகப்பிடித்த‌மைக்கு முக்கியமான இன்னொரு காரணம் பாடல் வரிகளின் மொழி வழக்கு. நான் மலையகத்தில் தேயிலைத் தொழிலாளர் சூழலில் பிறந்து வளர்ந்தவன். இது அந்த‌ மொழி வழக்கு. ஆகவே இலகுவாக ஒன்றிப்போய் விடமுடிகிறது. ஆனால் மொழி வழ‌க்கையும் தாண்டி பாடல்களில் ரசிக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. ரசிப்போம்,  இயக்குனர் பாலா இன்னுமொரு 'அவன், இவன்'ஐ தந்து பாடல்களை விழலுக்கிறைத்த நீராக்கிவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன்!




வியாழன், ஜனவரி 21, 2010

பாட்டு செம‌ சுவீட்டு - மெல்லினமே, மெல்லினமே...

0
என்னதான் குத்துப்பாடல்களும் தத்துவப்பாடல்களும் பட்டி, தொட்டி எங்கும் பட்டையை கிளப்பினாலும் மெல்லிய காதல் பாடல்கள் தான் நம் மனதில் ஏறி அமர்ந்துக் கொள்ளுகின்றன . அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பல மெல்லிய காதல் பாடல்களை கேட்கும்போதே நான் 'என் வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாத அந்த உருண்டை உருள' உணர்ந்திருக்கின்றேன்  ( 'யூத்'தாக்கும்   ஹி..ஹி.. ).

அப்படியான பாடல்களில் ஒன்றுதான் ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மெல்லினமே, மெல்லினமே....' என்ற பாடல். ஒருதலைக்காதலின் சுகம், சோகம் இரண்டையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடல்கள் மிகக்குறைவு.  என்னதான் இந்தப்பாடல் சோகப்பாடல்களின் வரிசையில் வராவிட்டாலும், பாடலில் அங்கங்கே இழையோடும் சோகத்தில் கவிஞர் வாழ்ந்திருக்கின்றார்.



'மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்...'

மெல்லினமே என்று தமிழையும், மென்மையையும் கலந்துக்கட்டி காதலியை அழைக்கும் அந்த முதல் வரி, 'வைரமுத்து டச்'!


'என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி...'
காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சாகும்போது, காதலனுக்கு? அடுத்த வரியிலேயே அந்த உயரத்தை அளந்தும் கொடுக்கின்றார்.
'அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்'
பூக்கும், பார்க்கும் - பொருளில் மட்டுமில்லை, வார்த்தைகளிலும்  விளையாடுகிறார் கவிஞர்.

'நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்...'

ஏக்கமா, வியப்பா? காதலில் விழுந்த அந்த நொடியில் புதிதாய் பிறக்கின்றான், இருபத்தைந்து வயதை இழக்கின்றான்.
இழுத்தாய், அடைத்தாய்-அந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது.

'வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி'

புயலிலும் சாயாத வேர்கள், பட்டாம் பூச்சியால் சாய்ந்ததாக தன் ஏக்கத்தையும், வியப்பையும் தொடர்கிறான் காதலன். ஏன் வேர்? வேரில்லாமல் வேறில்லையே...வேரையே சாய்த்துவிட்டாள். இனி என்ன செய்வது!

'எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி'

ஒவ்வொரு காதலனுக்கும் காதலை சொல்வதில் உள்ள தயக்கத்தையும் இயலாமையயும்  உணர்த்தும் வரிகள்.

'கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக'

கனவுப் பூவே....உண்மை தான். ஒருதலை காதலனுக்கு அவன் காதலி 'கனவுப்பூ'தானே, நேரில் என்ன செய்ய முடியும்?
காதலை சொல்ல அவனால் முடியவில்லை. அவளாக வரவேண்டுமாம், இதயத்தை பரிமாறிக்கொள்ள!

'மண்ணைச்சேரும் முன்னே அடைமழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..'

ஆஹா, இப்படித்தானே இருக்க வேண்டும் உவமை. எவ்வளவு எளிமையான வரிகள். குழ‌ந்தைக்கும் புரியும்.
'முன்னே', 'பின்னே' என  வார்த்தைக் கோர்வைகள் காதில் தேனாக பாய்கின்றன.

'வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்'

காதல் ஏற்படுத்தும் மாற்றத்தையும், மென்மையையும் இதை விடவும் அழகாக கூறி விட முடியுமா, இரண்டே வரிகளில்?

கடைசி வரிகள் தான் இந்தப் பாடலின் 'MASTERPIECE'.
'பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதுமில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறை
வதும் இல்லை '
உவமையின் உச்சம். நான் முன்பே கூறியது போல் இந்த வரிகளின் பின்னே இழையோடும் சோகம், நம் மனதிலும் குடிகொள்கின்றது. இதுவே இந்த வரிகளின் வெற்றி.

பாடல் வரிகளின் தொடர்ச்சித்தன்மையில் ஒரு குட்டிக்கதையையே கவிஞர் சொல்லிமுடித்திருப்பதை உணரலாம், முடிவு உட்பட‌ (படக்கதையும் கிட்டத்தட்ட அதுவே). பாடலை முழுமையாக கேட்டு முடிக்கும் போது கடற்கரை வெயிலோடு, ஈரமான கடற்காற்றையும் சேர்த்து அனுபவித்தது போன்றதொரு உணர்வு. உங்களுக்கும் அப்படித்தானே...?

இதையும் சேத்துக்குங்கோ...
  • இந்த‌ பாடல் எனக்கு பிடித்தமைக்கு வரிகளை சிதைக்காத, மறைக்காத இசை வழங்கியிருந்த‌ மணிசர்மாவும், கவிஞரோடு சேர்ந்து வாழ்ந்திருந்த பாடகர் ஹரிஸ் ராகவேந்திராவும் கூட முக்கிய காரணங்கள்.
  • பாடலுக்கான காட்சிப்படுத்தலும் கூட வரிகளுக்கேற்ப‌ இருந்தது. ஒளிப்பதிவு, லொகேஷன் மற்றும் ரிச்சா பல்லோட்- அனைத்தும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக விஜய். அந்த‌ ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகளும், அவருக்கேயுரிய குறும்பும், குழந்தைத்தனமும் கலந்த முகபாவனைகளும் -ஒரு  ஹைக்கூ. (இப்ப‌ எங்க சார் போய்த்தொலஞ்சீங்க?)
  • இது என்னதான் அருமையான பாடலாக இருந்தபோதும் படத்தில் பெரிய‌ ஹிட் ஆனது என்னவோ 'சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்' என்ற குத்துப் பாடல் தான். இதற்காக சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கூட 'இங்கே' கவலைப்பட்டிருந்தார்.

இதோ பாடல்.....







Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner