திங்கள், அக்டோபர் 10, 2011

Conviction (2010) - தியாகம், போராட்டம் மற்றும் சட்டம்!

2
அண்ணன் - தங்கை சென்டிமென்ட்!  வேறெந்த சினிமாக்களையும் விட தமிழ் சினிமாவில் இதைக் கருவாகக்கொண்டு கொஞ்சம் அதிகமாகவே படங்கள் வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். 'T.R' க்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இவருக்கு பேட்டி கொடுப்பதை விட அதிகமாக பிடிச்ச விஷயம் அண்ணன்‍ ‍ தங்கை சென்டிமென்டாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு படங்களை எடுத்துத் (படுத்தித்) தள்ளியிருக்கிறார். என‌க்குத் தெரிந்து அண்ணன் தங்கை சென்டிமென்டையே கருவாக கொண்ட‌ பட‌ங்களில் கிழக்குச் சீமையிலே , முள்ளும் மலரும் ( இந்த தலைப்பே ஒரு கவிதை. அதைப்பற்றி எனது முன்னைய பதிவு) போன்ற படங்கள் என்னை மிகக் கவர்ந்தவை.

ஆனால் என்ன... மேலே சொன்ன‌ அனைத்து தமிழ்ப்படங்களிலுமே கதைக்க‌ரு ஒன்றாகத்தான் இருக்கும். சுருக்கமாக சொல்வதென்றால் அண்ணன் அல்லது த‌ங்கை திருமணம் செய்வதால்/செய்வதற்கு ஏற்படும் மன/பணப் பிரச்சினை! தமிழ் சினிமா இந்த வட்டத்தை விட்டு வெளியில் வந்தது குறைவு. ஆனால் நிஜவாழ்வில் இதைத் தவிரவும் எத்தனையோ வித்தியாசமான பாதைகளில் அண்ணன்‍‍ தங்கை உறவு பயணிக்கச்செய்கின்றது. அப்படியான ஒரு பாதையில் பயணித்த ஒரு உண்மைக்கதையை  தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இந்த 'Conviction'!

படம் பார்க்கும் வரை இப்படத்தைப் பற்றி ஒன்றும் எனக்கு தெரியாது, பட இயக்குனர் 'Tony Goldwyn' உட்பட. அப்படி இருந்தும் இப்படத்தை நான் தெரிவு செய்தமைக்கு ஒரே காரணம் 'Hilary Swank'! ஏற்கனவே இவரின் 'Million Dollar Baby' படத்திலேயே இவரின் நடிப்பு வெகுவாக கவர்ந்திருந்தாலும், 'சே..சான்ஸே இல்லப்பா, இனி இவட படத்த மிஸ் பண்ணக்கூடாது' என எண்ணத்தை தோற்றுவித்த, நான் பார்த்த இவரின் இரண்டாவது படம் 'Boys Don't Cry'!. இந்தப்படம் இவரின் அறிமுகப்படம். படம் முழுக்க 'Sexual Identity Crisis' பிரச்சினையால் ஆணைப்போலவே ஒப்பனை செய்துக்கொண்டு, ஊரை ஏமாற்றி திரிவார். படம் தொடங்கி 20, 30 நிமிடங்களில் நீங்களும் அவர் ஒரு பெண் என்பதை மற‌ந்து விடுவீர்கள். அதுதான் 'Hilary Swank' இன் வெற்றி. முதல் படத்திற்கே ஆஸ்கார் வாங்கியவர்.('Million Dollar Baby'க்கும் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார்). இந்தப்படத்தை பற்றியும் ஒரு பதிவு போடலாமென என எண்ணியுள்ளேன் (உங்கள எல்லாம் ஒரு வழிப்பண்ணாம விடப்போறதில்ல‌). சரி இனி படத்திற்கு வருவோம்.

படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே ஒதுக்குப்புறமான வீட்டினுள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கின்றார் ஒரு பெண் (Mrs. Brow). தூரத்தே மரவேளை செய்துக்கொண்டிருக்கும் 'Kenny Waters'இன் நக்கலான பேச்சு + வைத்திருக்கும் ஆயுதம் + முகத்தின் கீறல்கள் அவர் மேல் சந்தேகத்தை வரவழைக்க விசாரனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் ஆதாரமில்லாது விடுவிக்கப்படுகின்றார். ஆனால் அதே கொலைக்காக இரண்டு வருடம் கழித்து மீண்டும் கைது செய்யப்படுகின்றார். ஆனால் இம்முறை அவர் சற்றும் எதிர்பாராதவிதமாக சாட்சிகள் அவருக்கு எதிராக இருக்க ( அவர் மனைவி உட்பட) ஆயுள் தண்டனை கிடைக்கின்றது.  கொலைக்கு முக்கிய தடயமாக கருதப்படுவது, 'Mrs. Brow' இன் வீட்டில் கிடைக்கும் இரத்தமாதிரியின் வகுப்பும், 'Kenny'இன் குருதி வகுப்பும் ஒத்துப்போவதுதான் (கவனிக்க: கதை 1983 காலப்பகுதியில் நடப்பதால் அப்போது 'DNA' வசதிகள் இல்லை).

ஆனால் தன் அண்ணனை முழுதாக நம்பும் 'Betty' தானே வழக்கறிஞராகும் முயற்சியில் சட்டக்கல்லூரியில் சேர்கிறார். கணவனும் பிரிந்துவிட்ட‌ நிலையில் இரண்டு மகன்களையும் வைத்துக்கொண்டு பெரும் போராட்டத்தின் பின் 18 வருடங்களின் பின் தனது நண்பி 'Alba Rice' இன் உதவியோடு 'DNA' வசதிகளை பயன்படுத்தி தன் அண்ணனை விடுவிப்பது தான் கதை!

இது 1983இல் நடந்த ஒரு உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.  குடும்ப உறவுகளுக்கிடையில் இருக்கவேண்டிய நம்பிக்கை, தியாக உணர்வுகளை சிறப்பாக சொல்லும் ஒரு படம்.

படத்தின் மிகப்பெரிய பலம் 'Betty'யாக வரும் 'Hilary Swank' ! தீர்க்கமான‌ தங்கை, பொறுப்பான‌ தாய், ஆதரவு தேடும் நண்பி என்று எல்லா பாத்திரமாகவும் மாறிவிடுகிறார். கண்களில் இழையோடும் சோகத்துடன் அந்த போலிச்சிரிப்பு ஒன்றே மனதை ஏதோ செய்கிறது.


அடுத்து 'Kenny'யாக வரும் 'Sam Rockwell'. முரட்டுத்தனமும் , சேட்டைத்தனமும் கல‌ந்த கதாபாத்திரமாக! நைட் கிளப்பில் ஒருவரை முரட்டுத்தனமாக தாக்கிவிட்டு அடுத்த நிமிடத்திலே கூலாக ஒரு நிர்வாணமாக ஆட்டம் ஆடும் கேரக்டர். (இருந்தாலும் அந்த காட்சி கொஞ்சம் ஓவர். அதுவும் சொந்த தங்கையின் முன்னால் நிர்வாணமாக, சகிக்கவில்லை). இவருக்கும் 'Hilary Swank'க்கும் இடையிலான  அந்தக் கெமிஸ்ட்ரி படத்திற்கு நன்றாகவே உதவியிருக்கின்றது. ஜெயில் காட்சிகளில் அசத்துகிறார். தவறாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு ஆயுள்தண்டனை கைதியின் விரக்தியையும் கோபத்தையும் நன்றாகவே பிரதிபலிக்கிறார்.சில காட்சிகளில் இவர் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும்போது அந்த சந்தோஷம் நம்மையும் தொற்றிக்கொள்ளுகின்றது. 


இவர்கள் இருவரைத்தவிர இவர்களது தாய், 'Betty'இன் நண்பி, மகன்கள், 'Kenny'இன் மனைவி, மகள்,என அனைத்து பாத்திர‌த்தெரிவுகளும் அவர்களின் நடிப்பும் நிறைவாக இருக்கின்றது.

படத்தின் இடையிடையே வரும் 'Kenny, Betty'இன் குழந்தைப்பருவத்து காட்சிகள் கதையோட்டத்திற்கு நன்றாகவே உதவியிருக்கின்றன. இக்காட்சிகளில் குழ‌ந்தைப்பருவத்திலிருந்தே இருவருக்குமுள்ள நெருக்கமும் புரிந்துணர்வும் காட்டப்படுவதால் படத்தின் இறுதிவரை போராடும் 'Betty' பார்க்க நமக்கு நெருடலாக இல்லை. அத்தோடு சிறுவயதிலேயே இருவரும் வீட்டினுள் அடிக்கடி கள்ளததனமாய் நுழைவது பிறகு இன் மேல் சந்தேகம் வலுப்பெற முக்கிய காரணமாகிறது.

படத்தில் எனக்கு நெருடலாக இருந்த விஷயங்கள். ஒன்று கணவனும் பிரிந்துவிட்ட நிலையில் ஒரு பாரில் பகுதி நேரமாக வேலைசெய்து கொண்டு வரும் வருமானத்தில் சட்டக்க‌ல்லூரியிலும் படித்துக்கொண்டு இரண்டு மகன்களையும் வளர்ப்பது. (இவர்கள் இருவரும் ஏதொ செல்வந்தர் வீட்டில் வளர்வது போன்றுதான் காட்டப்படுகிறது) மற்றது கணவனுக்கு எதிராக சாட்சி சொல்லும் மனைவி. இருவருக்குமிடயில் எதுவும் பிரச்சனை இருப்பதாக காட்டவில்லை. ஒரு போலிஸ் அதிகாரி மிரட்டியதற்காக முன்னாள் காதலி பொய் சாட்சி சொல்வது OK. ஆனால் சொந்த மனைவி?

 இவ்வாறான 'Drama'  வகையறாப்படங்களிற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது படத்தின் வசனங்கள். இந்தப்படத்திலும் அப்படியே. பல இடங்களில் வசனங்களே பலக் காட்சிகளை நியாப்படுத்துகின்றன. குறிப்பாக சாட்சிகளை பொய்யாக சோடிப்பதற்கு 'Nancy Taylor'  கூறும் காரணம் "Once I get my lead, I never let it go."! 'Kenny Waters' ஐ விடுதலை செய்ய‌ 'DNA' சாட்சியை விட‌ இன்னுமொரு சாட்சி தேவைபடும்போது வரும் வசனம் "Because people don't like to admit when they've made a mistake"!  இவற்றைவிட படத்தின் இறுதிக்காட்சியில் விடுதலை செய்யப்பட்ட 'Kenny',  'Betty'இடம் பேசும் வசனம். "Even if it had taken you another 20 years or so, I would've been okay knowing you were out here, working so hard for me, knowing that you loved me that much".  மனதை கனக்கவைக்கும் இந்த டயலாக்கோடு படம் முடிகிறது.

மொத்தத்தில் அருமையான நடிப்புடன் கூடிய ஒரு 'Biography' படம் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லப்பட்ட ஒரு அண்ணன் தங்கை சென்டிமென்ட் படம் என இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்க ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் பார்க்கவேண்டிய படம் 'Conviction'!


படத்திற்கு வெளியே...
# உண்மையான 'Betty' படத்தை பார்த்துவிட்டு பின்வருமாறு கூறியிருக்கிறார்
"The movie is so true to life. Not every scene happened, but every emotion happened." 

# உண்மையிலேயே 'Kenny' விடுதலை செய்யப்பட்டு ஆறு மாதத்தில் ஒரு விபத்தில் காயமுற்று பின் இறந்திருக்கின்றார். ஆனாலும் இது படத்தில் சொல்லப்படவில்லை.

உண்மையான Kenny and Betty

படத்தைப் பற்றி மேலதிக தகவல் மற்றும் Trailer
நன்றி - IMDB 

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

மங்காத்தாடா...!

2

தமிழில் , அதுவும் ஒரு மாஸ் ஹீரோவிடம் ஒரு படம் முழுக்க நீ கெட்டவனாக நடிக்கவேண்டும் என்று இதற்கு முன் மூன்றே மூன்று படங்களை இயக்கியிருக்கும் ஒரு இளம் இயக்குனர் கேட்டால், அதுவும் அந்தப் படம் அந்த மாஸ் ஹீரோவின் 50ஆவது படமாக இருக்கும்போது... யாராவது தைரியமாக ஒத்துக்கொள்வார்களா..?

ஒத்துகொள்வார்... யார் 'அஜித்', படம் 'மங்காத்தா'..!


படத்தின் கதை ஒரே வரியில் : அஜித் அன்ட் கோ  500 கோடி பணத்தை கொள்ளையடிக்க போடும் திட்டமும் கொள்ளையடிப்பதும் முற்பாதி, கொள்ளைய‌டித்த பணம் படுத்தும் பாடு பிற்பாதி!

40 வயது, நரைத்த முடி, தாடி இவை எல்லாம் வேறு யாருக்கும் மைனஸாக இருக்கலாம். ஆனால் அஜித்திடம் இவை அனைத்தும் ப்ளஸாக இருக்கின்றது. அதுதான் அந்த கேரக்டரின் வெற்றி. அதிரடியாக சண்டை போடுவதிலும் விட சின்ன சின்ன மேனரிசத்திலே வில்லத்தனத்தை காட்டி அசத்துகின்றார். குறிப்பாக ஜெயப்ரகாஷை கடத்திவந்து (திரிஷாவை பார்த்துவிட்டு) காரிலிருந்து வெளியே தள்ளிய பின் விடும் அந்த லுக் - Class..! அத்தோடு சூப்பர் ஸ்டாரிற்கு பிறகு அஜித்தின் உதடுகளில் தான் அந்த சிகரட் கச்சிதமாக அம‌ர்கின்றது.


ஆனால்  என்னதான் அஜித்தை ரசிக்க முடிந்தாலும் சண்டைகாட்சிகளும், நடனக்காட்சிகளும் இவரின் தொப்பையிடம் படும்பாடு கொஞ்சம் நெளியச்செய்த‌து. குறிப்பாக அந்த அறிமுக சண்டைக்காட்சி! என‌க்கென்னவோ அஜித்தின் அறிமுகக்காட்சியை விட அர்ஜுனின் அறிமுகக்காட்சி நன்றாக இருப்பதாகப்பட்டது.

அஞ்சலி, ஆன்ட்ரியா ‍இருவ‌ரும் இரண்டு பிளாக்மெயில் காட்சிகளுக்கு உதவியிருக்கிறார்கள். திரிஷாவுக்கு கூட பெரிதாக ஒன்றும் செயவதிற்கில்லை. லக்ஷ்மி ராய் தான் கடைசிவரை ஒரு 'காட்டு' காட்டுகிறார். ;-)


 பிரேம்ஜி வழமைப்போலவே கிச்சு கிச்சு மூட்டுகிறார். குறிப்பாக அவரது நன்பனை லக்ஷ்மி ராய் போட்டுத்தள்ளிவிட‌ இவர் அடிக்கும் 'சிட்டி' ரக லூட்டிக்கு தியேட்டரில் சிரிப்பு வெடி. ஆனால் கிளைமாக்ஸ் ச‌ண்டைக்காட்சியில் இவர் புலம்பிக்கொண்டு திரிவது எரிச்சலூட்டியது. அடுத்த படத்தில் இதே கூட்டணி அலுப்புத் தட்டிவிடுமோ?

இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து வரும் திருப்பங்க‌ள் (Twists) சுவாரஷ்யம். ஹாலிவுட்டில் இம்மாதிரியான‌ 'Robbery' திரைப்படங்களில் வரும் திருப்பங்கள் மிக சுவாரஷ்யமாக‌வும் லாஜிக்காகவும் இருக்கும். மங்காத்தாவின் திருப்பங்களில் லாஜிக் கொஞ்சம் உதைக்கிறது. குறிப்பாக கடைசியில் வரும் அந்த Twist. ஏதோ இரண்டு காட்சிகளை காட்டி அதை விளக்குகிறார்கள். ஆனால் கொஞ்ச‌ம் ஆழமாக போனால் லாஜிக் உதைக்கிறது. ஆனாலும்  சுவாரஷ்யமான திருப்பங்களுக்காக வெங்கட்பிரபுவிற்கு ஒரு பூச்செண்டு!

எதிர்பார்த்ததைப்போன்றே சில ஆங்கிலபடங்களின் பாதிப்பு ஆங்காங்கே தெரிகின்றது. குறிப்பாக 'Traffic Network Control'ஐ  வைத்துக்கொண்டு வாகனங்களை டைவர்ட் செய்வது ஏற்கெனவே 'The Italian Job'இல் வந்தது.

கிளைமாக்ஸில் எங்கே 'போக்கிரி' படம்  மாதிரி ஏதும் அஜித் நல்லவராகி விடுவாரோ என பயந்திருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. அதற்காகவே இந்தப்படம் எனக்கு இன்னமும் பிடித்தது. மொத்தத்தில் 'மங்காத்தா' கிட்டத்தட்ட ஒரு ஆங்கிலப்படத்தை பார்த்ததைப் போன்றதோரு உணர்வைத் தந்தது.

மங்காத்தா - தல ஆடாமல் ஆடியிருக்கும் ஆட்டம்!







ஞாயிறு, ஜூன் 12, 2011

அதிகாலை அவஷ்தைகள்!

14


10.00,10:01,10:02..சுவர்க்கடிகாரம் இரவை அளந்துக் கொண்டிருந்தது. இப்படியே கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடுமாம் எப்போதோ அம்மா சொல்லித்தந்தது. சில நேரங்களில் நடப்பதுமுண்டு. ஆனால் இப்போது நடக்கவில்லை. மொபைலை எடுத்தேன். அலாரம் 3.45AM எனக்காட்டியது. எரிச்சலாக இருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு அதிகாலையில் பயணம் செய்யவேண்டிய கட்டாயம். நான் அதிகாலையில் பயணம் போவது கங்குலி IPL விளையாடுவது மாதிரி. சரிப்பட்டே வந்ததில்லை. ஒன்று விடிய, விடிய தூக்கத்தோடு போராட்டமே நடத்த வேண்டியிருக்கும், இல்லை அலாரத்தையும் தாண்டி தூங்கிப் பின் அரக்க பறக்க புற‌ப்பட வேண்டியிருக்கும். எனக்கே தெரியாமல் அலாரத்தை Off செய்துவிட்டு தூங்கிய அனுபவங்கள் கூட உண்டு. நாளை எப்படியோ யோசித்துக்கொண்டே 'சிட்டி' ஐ தேடினேன்.கட்டிலுக்கு பக்கத்தில் நிம்மதியாக துங்கிக்கொண்டிருந்தது. ['சிட்டி' என்றால் ரோபோ அல்ல, எங்கள் வீட்டு நாய்.. உதிரித்தகவல்: அந்த சிட்டிக்கும் , இந்த சிட்டிக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அது என்ன சொன்னாலும் கேட்கும் , இது என்ன சொன்னாலும் கேட்காது ;-)] மீண்டும் கடிகாரத்துக்கே வந்தேன்.  கண்கள் இலேசாக செருகத்தொடங்கின.
*************
'வவ் , வவ் '... 'சத்தத்தில் விழித்தேன், 'சிட்டி' எதற்காகவோ குரைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் கலைந்தது. நேரம் 3.40AM . அலாரம் அடிக்க இன்னும் 5 நிமிடமே இருந்தது. 'சிட்டி'யை சந்தோஷத்துடன் பார்க்க அது என் காலை நக்கத்தொடங்கியது. தலைமாட்டில் வைத்த மொபைல், கட்டிலிக்கும் ,இடுப்பிற்குமிடையில் செருகி அவஷ்தைப்பட்டுக்கொண்டிருந்தது. எடுத்து அலாரத்தை 'Off' செய்து விட்டு வாழ்க்கையிலே முதன் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அதிகாலைப்பயணத்திற்கு ஆயத்தமாக தயாரானேன்.
*************
4.30AM. 'AXE'இன் நறுமணத்தை உடம்பில் வாங்கிக்கொண்டேன். 'AXE'ஐ பாவிக்கும் போதெல்லாம் அதன் T.V விளம்பரங்கள் கண் முன்னே வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை. கூடவே ஒரு சிரிப்பும் வரும். ;-)




ஒரு ஆனந்த விகடன், மொபைல் நிறைய MP3, கண்ணில் மிச்சமிருந்த தூக்கம்... நான்கு மணி நேர பயணத்தை ஓட்டிவிடலாம் என எண்ணிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தேன். வழமையாய் குண்டூசி சத்தத்திற்கே 'திடுக்கிட்டு' எழும் அம்மா இன்று அதிசயமாக தூங்கிக்கொண்டிருந்தார். எழுப்ப மனம் வரவில்லை. வாலை ஆட்டிக்கொண்டே 'சிட்டி' வாசல் வரை வந்தது. கதவை பூட்டிவிட்டு தெருவிற்கு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அதிகாலையில் தெருவில் இப்படி ஆறுதலாக நடப்பது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 'சிட்டி'க்கு நன்றிச் சொல்லிக்கொண்டேன். 
**************
10 நிமிடத்தில் பஸ் நிறுத்தத்தை அடைந்தேன். காத்திருந்த 10 நிமிடத்தில் ரஜனியின் உடல்நிலையில் தொடங்கி சனத்தின் மனநிலை வரை மனம் பல விஷ‌யங்களை அசைப்போட்டுக்கொண்டிருந்தது. அத்தனையையும் துரத்தியடித்துக்கொண்டு 'இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' வந்து நிறுத்திய போது நேரம் 5.00. ஏறினேன், எதிர்ப்பார்த்ததைப் போலவே இருக்கைகள் பல காலியாக இருந்தன. அதிகாலையில் பயணம் செய்வதில் இருக்கும் வசதிகளில் ஒன்று. ஜன்னலோர இருக்கையொன்றில் போய் இருந்துக்கொண்டேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது வசதியாக இருந்தது. முதல் வேலையாக‌ காதுகளில் 'ஹெட் செட்' டை செருகி, MP3 பிளேயரை தொடக்கினேன் 'வாழ்க்கை ஒரு போர்க்களம்...' என காதுகளில் கதறியது என்னவோ செய்ய 'ஹரிஷ் ஜெயராஜ்'க்கு தாவினேன். 'எங்கேயும் காதல் .. ' என இதமாக ஆரம்பிக்க அப்படியே சாய்ந்தேன். எல்லாமே சரியாக நேரத்திற்கு போய்க்கொண்டிருப்பது எங்கோ ஏதோ செய்தது.
****************
5 :05, 5 :10, 5 :15... கண்கள் மெதுவாக செருக ஆரம்பித்த வேளை 'எக்ஸ்கியுஸ் மீ ' என ஹரிஸையும்  தாண்டி செவிகளில் தென் பாய்ச்சியது ஒரு குரல். கண்கள் அனிச்சையாகவே திறக்க அருகே ஒரு 'ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி' பக்கத்து இருக்கையை கேட்டுக்கொண்டு நின்றது! பஸ்ஸில் வேறு சில இருக்கைகளும் காலியாகத்தான் இருந்தன. 'கண்ணா ல‌ட்டுத் தின்ன ஆசையா' யாரோ கேட்டதைப்போல் இருந்தது. நான் சற்று விலக, பக்கத்து இருக்கை அவளை தாங்கிக்கொள்ளும் பாக்கியம் பெற்றது. என்னைப்பார்த்து இலேசாக சிரித்தாள். அவள் கன்னத்துக்குழி யாரோ ஒரு புது நடிகையை ஞாபகப்படுத்தியது. எதற்காகவோ எழும்பினாள். இறுக்கமான் டீஷேர்ட்டும், ஜீன்ஸும் அவள் வளைவு நெளிவுகளை அந்த மங்கலான வெளிச்சத்திலும் அம்பலப்படுத்தின. பார்வை அவளை விட்டு அகல மறுத்தது. கண்களை அவள் ஆக்கிரமித்துக்கொள்ள காதுகளை ஆலாப் ராஜா ஆக்கிரமித்தார் 'என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்....' என..!
*************


5.20, 5.25,5.30... அவள் அருகாமை தூக்கத்தை துரத்தி விட்டிருந்த‌து. 'நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..' திரும்பத் திரும்ப 'என்னமோ ஏதோ...'வையே மன‌ம் விரும்பியது. யார் நெருங்குகிறோம் விளங்கவில்லை, ஆனால் எங்களுக்குள் இடைவெளி குறைவது மட்டும் நன்றாக விளங்கியது. ஒரு 'ஹலோ' சொல்லலாம் என 'சுவாமி நித்தியானந்தா'வை ;-) வேண்டிக்கொண்டு மனதில் ஒத்திகைபார்க்க ஆரம்பித்த வேளை, தோளில் தென்றல் மோதியதைப்போல ஒரு உணர்வு. திரும்பியபோது.. [மக்கள்ஸ் உங்கள் மனதை திடப்படுத்திக்கொள்க...! ;-)] அவ‌ள் என் தோளில் சாய்ந்து தூங்கிகொன்டிருந்தாள். 'கண்ணா ரெண்டாவது லட்டுத்தின்ன ஆசையா..?' ஆலாப் ராஜாவே காதுக்குள் கேட்டார். 'AXE EFFECT' வேறு ஜாபகத்திற்கு வந்து தொலைத்தது. சுதாகரிப்பதற்குள்ளே நிமிடங்கள் பறந்திருந்தன. அவள் 'ஷாம்பு' வாசம் நாசியில் நுழைந்து உயிரை கபளீகரம் செய்துக்கொண்டிருந்தது. இன்ப நிமிடங்கள் இம்ஷித்துக் கொண்டிருந்தன. அவளோ மேலும் மேலும் நெருங்கினாள், நானோ மேலும் மேலும் நொறுங்கினேன். அடுத்தது என்ன..... என் கழுத்தில் அவள் இதழின் ஈரத்தை உணர ஆரம்பித்தேன். என் வறண்ட உதடுகளில் வார்த்தைப்பஞ்சம் ! எப்படியோ சுதாகரித்துக்கொண்டு 'ஹலோ..' என்றேன் அவள் காதுகளில் மெதுவாக‌...! அதற்கு அவள்....... 'வவ் , வவ் '...குரைக்கத்தொடங்கினாள்...!
**********




'சிதம்பரச்சக்கரத்தை பார்த்த பேயை' பற்றி அறிந்து வைத்திருந்தேன். இப்போது அதை முழுவதுமாக அனுபவித்தேன். அதுவும் அரைத்தூக்கத்தில்...! அதையெல்லாம் பொருட்படுத்தாது 'சிட்டி' என் கழுத்தை நக்குவதிலே தீவிரமாக இருந்தது. கழுத்தின் ஈரத்திற்கு உண்மையான காரணம் உணர்ந்தேன். 'வவ், வவ்' மீண்டும் குரைத்தது. தூக்கம் முற்றாக கலைந்தது. நேரத்தை பார்த்தேன். அதிகாலை 5 மணி! மொபைலை எடுத்துப்பார்த்தபோது அலாரம் 'Off' செய்யப்பட்டிந்தது. அடுத்து ................. வேறென்ன எழும்பி மீண்டும் 'வழமையான' ஒரு அதிகாலைப் பயணத்திற்கு அரக்கப் பறக்க ஆயத்தமானேன்.
************
முற்றும்..! (அனால் ஒன்று அதிகாலை கண்ட கனவு பலிக்குமாம். :-P)

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner