புதன், நவம்பர் 18, 2009

நிலா எழுதிக்கொள்வது என்னவென்றால்.......

0

கவிப்பேரரசே, கவி மார்க்கண்டேயரே,இன்னும் காதல் பாடும் ஏனைய கவிகளே என்ன நடந்தது உங்களுக்கெல்லாம்?  
இப்பொழுதெல்லாம் உங்கள் பேனை என் பேரை எழுதுவதேயில்லையா?  
கறுப்பு, வெள்ளை காலத்திலிருந்தே நானும் ஒரு கதாநாயகி என்பதை மறந்துவிட்டீர்களா?
நினைவில்லையா, அப்போதே காதல் ஊமையானபோது, என்னைத்தான் உவமையாக்கினார் உங்கள் மூத்தகவி 'நிலவே என்னிடம் நெருங்காதே...'என்று.

நீங்களும் கூட என்னை தொட்டுத்தழுவிக்கொண்டுதானே இருந்தீர்கள், கொஞ்ச காலத்துக்கு முன் வரை!
விஞ்ஞானமே வியந்து கொண்டிருந்த என்னை லாவகமாக பிடித்து, உங்கள் துணையிடம் மார்தட்டிக் கொண்டீர்கள் 'அந்த நெலாவத்தான் நா கையில பிடிச்சேன்..' என்று.
'என் இனிய பொன் நிலாவே...' என்று எனக்கு தங்க முலாம் வேறு பூசிவிட்டீர்கள்.
மன்றம் வந்தும், மஞ்சம் வர மறுத்த மனைவியிடம் ' நிலாவே வா...' என்று என்னை வைத்து மெளனராகம் இசைத்தீர்கள்.
காதலியை தொட்டுவிட்டு என்னையே தொட்டுவிட்டதாக ஆம்ஸ்ட்ரோங்கையே சண்டைக்கழைத்தனர்-உங்கள் 'ரட்சகர்கள்'!
என்னை விண்ணைத்தாண்டி வரச்சொல்லிவிட்டு,நண்பனின் காதலியோடு கைகோர்த்து விளையாடிக்கொண்டிருந்தார் உங்கள் நாயகன்-கண்களில் மின்சாரக்கனவுகளோடு!
' வெண்ணிலா, இரு வானிலா...' என்று என்னை துண்டு போட்டீர்கள் - காதல் தேசத்தில்!
இவ்வளவு ஏன், ' நிலா அது வானத்து மேலே...' என 'Item Song'க்குக்கூட என்னைத்தானே ஆடவிட்டீர்கள்-அரைகுறையாக!

இப்படி எத்தனை, எத்தனையோ...சொல்லப்போனால் என்னை காதலிக்காத உங்கள் கதாநாயகர்களே இருந்ததில்லை.
இப்பொழுதெல்லாம் என்ன நடந்தது உங்களுக்கு, உங்கள் கற்பனைக்கரம் என்னை வருடுவதேயில்லையே, உங்கள் பேனை என் பேரை எழுதுவதேயில்லையே...!
விஞ்ஞானம் கரடு, முரடாக என்னை படம்பிடித்துக் காட்டிவிட்டதால் உங்கள் கற்பனையும் , காதலும் என்னை புறந்தள்ளிவிட்டனவா?
வேண்டாம், நான் தேய்வதும், மறைவதும் வானில் மட்டுமாக இருக்கட்டும், உங்கள் கற்பனையில் என்னை மறைய, ஏன் தேயக்கூட விடாதீர்கள். ஏனென்றால் என்னைக் காதலிப்பதற்கு ஒரு கூட்டமே காத்துக்கிடக்கின்றது.

இனி மீண்டும் என்னை ஆடவிடுங்கள-உங்கள் டூயட்டில்,
வாடவிடுங்கள்-உங்கள் சோகத்தில்!
யார் கண்டது, அடுத்த தேசிய விருதைக்கூட நான் உங்களுக்கு வாங்கித்தரலாம்.

இப்படிக்கு
நிலா.










Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner