பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 07, 2013

கவிப்பேரரசு வைரமுத்துவின் 'பரதேசி'!

4

'கடல்' திரைப்பட‌  பாடல்கள் அடைந்த உச்சத்தில் ஏனைய பல நல்ல பாடல்கள் பெரிதாக கண்டுக்கொள்ளப்ப‌டவில்லை என நினைக்கின்றேன். குறிப்பாக 'பரதேசி' படப்பாடல்கள். இசையைப் பற்றி எனக்கேதும் பெரிதாக அறிவில்லை. நான் முதலில் ரசிப்பது பாடல் வரிகளைத்தான். பின்னர் தான் இசை, குரல் எல்லாம். கடல் பாடல்களின் இசை எல்லோரையும் போல என்னையும் வசீகரித்திருந்தாலும் பாடல் வரிகளை 'ஆஹா, ஓஹோ' என்று புகழமுடியவில்லை, வைரமுத்துவின் தீவிர ரசிகனாக இருந்தும் கூட . சில வேளை அதுவே அளவுக்கதிகமான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி பாடல்களில் திருப்தியின்மைக்கு காரணமாகியிருக்கக்கூடுமோ என எண்ணத்தோன்றுகின்றது.  மூன்று பாடல்களிலுமே வைரமுத்துவின் முத்திரை வரிகள் கொஞ்சம் குறைவு என்பது என் எண்ணம். குறிப்பாக 'மூங்கில் தோட்டம்..' பாடலில் கவிப்பேரரசு இன்னும் புகுந்து விளையாடியிருக்க வேண்டும். (மகன்/ம‌தன் கார்க்கிக்காக கொஞ்சம் அடக்கி வாசித்துவிட்டாரோ?). அது எப்படியோ போகட்டும். ஆனால் 'பரதேசி' பாடல்களில் அதே கவிப்பேரரசு ஒருக் காட்டு காட்டியிருக்கிறார். (கண்டுக்காதீங்க‌-, டாக்டர் 'விஜய்' படங்கள் அதிகம் பார்ப்பதன் விளைவு.). சிலப் பாடல்களைக்கேட்டு விட்டு இது இன்னார் பாடியது எனக் கூற முடிவதைப்போல வைரமுத்துவின் பல‌ பாடல்களின் வரிகளை கேட்டாலே சொல்லிவிடலாம் இது வைரமுத்து எழுதியது என்று. அவ்வாறான பல வரிகளை 'பரதேசி' பாடல்களில் காணலாம்.
முதலில் 'அவத்தப்பையா, செவத்தப்பையா..' பாடலிலிருந்து
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

'செரட்டையில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க' என்ற வரிகள்.

காதல் தரும் நிறைவையும், நெருக்க‌த்தையும் நான்கே வரிகளில், நச்சென! உவமைகளால் கோர்க்கப்பட்ட வரிகள். ஒரு ஏழை காதலைப் பாட நினைக்கும்போது காரும் பங்களாவும் கண்களில் தோன்றுவதில்லை. எனவே உவமையை செருகவ‌திலும் தர்க்கம் இருக்கவேண்டும். அங்கு தான் வைரமுத்து நிற்கிறார். 'செரட்டையில் பேஞ்ச சிறுமழை', 'கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு' என அவர்களின் தினசரி வாழ்க்கையிலிருந்தே உதாரணம் கோர்க்கிறார்.

அத்தோடு நிக்காமல் அதை பின்வருமாறு முடிக்கிறார்.

'நம்ம பூமி வறண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைஞ்சிருக்கு'

இந்தப்பாடலில் எனக்குப்பிடித்த வரிகள். வாழ்க்கைத்தத்துவத்தை விவகாரமாக‌  இப்படி இரண்டே வரிகளில் எத்தனைப் பேரால் எழுதிவிட‌ முடியும்?

அடுத்தப்பாடல்....
'ஹோ... செங்காடே சிறுகாடே போய் வரவா'
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

கொஞ்சம் 'விடை கொடு எங்கள் நாடே' (கன்ன‌த்தில் முத்தமிட்டால்) வகையறாப் பாடல். (அப்போது அந்தப் பாடல் கேட்டு கலங்காத‌ இலங்கைத்தமிழர் மிக சொச்சம்.)

'வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலப் போல
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு'

கொக்குக்கால்‍‍ - வத்திப்போன வாழ்வு. ஏற்கெனவே கூறியதைப்போல வைரமுத்துவின் உவமைக்கு இன்னொரு உதாரணம்!

இந்தப்பாடலில் என‌க்கு மிகப்பிடித்த வரிகள்...

'உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிறோடு வாழ்வது தானே பெரும் துன்பமே'

இதைவிட அழகான, ஆழ‌மான பசியைப்பற்றி பாடல் வரிகள் குறைவு என நினைக்கின்றேன். இந்த வரிகளை மதுபால கிருஷ்ணனின் குரலில் கேட்கும்போது மனம் ஒரு நிமிடம் கலங்கும். அது தான் அவ்வரிகளின் வெற்றி.

அடுத்து 'யாத்தே கால கூத்தே...'!
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

'ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை'

செவிட்டில் அறையும் வரிகளில் கசப்பான உண்மை!

இந்தப்பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்...

'வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான் ஏழையின் தாய்மொழி'

எளிமையான வரிகள், வலிமையான உண்மை!

அடுத்தப்பாடல்  'செந்நீர் தானா செந்நீர் தானா'!
பாடலைக் கேட்க இங்கே கிளிக்கவும்

இன்னொரு சோகப்பாடல்!

இந்தப்பாடலில் எனக்குப்பிடித்த சில வரிகள்...

'நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கைக்கூலி காயம் தானா?'

வேறு என்ன சொல்ல....வைரமுத்துவின் முத்திரை குத்தப்பட்ட இன்னுமொரு வரி!

'ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர்ச்சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே'

பூர்வீக போர்வை‍ ‍ - காலங்காலமாக ஒரே போர்வையை பாவிக்கின்றமையை இப்படி சொற்பிரயோகத்தில் உணர்த்துவ‌து - வைரமுத்து டச்!

'எங்க மேலு காலு வெறும் தோலா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே'

மீண்டும் வைரமுத்திரை!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை வடித்தெடுத்த சில வரிகள் மட்டுமே. பாடல்கள் முழுக்க இப்படி ஏராளமான விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன. ஆனால் என்னவொன்று, பெரும்பாலானவை சோகப்பாடல்கள். 'பாலா' படம்தானே அப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தப்பாடல்கள் எனக்கு மிகப்பிடித்த‌மைக்கு முக்கியமான இன்னொரு காரணம் பாடல் வரிகளின் மொழி வழக்கு. நான் மலையகத்தில் தேயிலைத் தொழிலாளர் சூழலில் பிறந்து வளர்ந்தவன். இது அந்த‌ மொழி வழக்கு. ஆகவே இலகுவாக ஒன்றிப்போய் விடமுடிகிறது. ஆனால் மொழி வழ‌க்கையும் தாண்டி பாடல்களில் ரசிக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. ரசிப்போம்,  இயக்குனர் பாலா இன்னுமொரு 'அவன், இவன்'ஐ தந்து பாடல்களை விழலுக்கிறைத்த நீராக்கிவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன்!




வெள்ளி, மார்ச் 19, 2010

மாத்தி யோசி! -1

1
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்'
மகாகவி பாரதி பாடியது. எனக்கும் அவ்வாறே! (இவனுக்கு வேற எத்தன மொழி தெரிஞ்சிருக்கப்போகுதுனு நீங்க கேக்குறது விளங்குது . அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..கண்டுக்கப்படாது! )

அதிலும் தமிழிலக்கணத்தில் 'சிலேடை' எனக்கு மிகவும் பிடித்தவொன்று. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரே சொல், பல பொருள். ஆங்கிலத்தில் 'PUN' (Paranomasia) என்பார்கள். இந்த சிலேடை, சினிமாப்பாடல்களில் உரிய‌ இடத்தில்  வரும்போது....குழல், யாழ், ஏன் மழலை மொழிக் கூட‌ தோற்றுப் போய்விடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசு கண்ணதாசன், கவி மார்க்கண்டேயர் வாலி போன்றோர் சிலேடைகளை பாடல்களில் புகுத்தும் விதம்..ஆஹா...தமிழ் தமிழ் தான், கவிஞன் கவிஞன் தான்!

முதலில் கண்ணதாசன். இவர்  'வீர அபிமன்யு' என்ற திரைப்படத்தில் 'பார்த்தேன் சிரித்தேன்' என்ற காதல் பாடலில் ஒரு இடத்தில்
'அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்' 
என சிலேடையில் சிலிர்க்க வைத்திருப்பார். இதில் ஒன்று மலை+தேன் (மலைப்பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட சுவையான தேன்) மற்றையது ஆச்சர்யத்தில் மலைத்துப்போவது. மிகவும் எளிதான சிலேடை. இது மட்டுமில்லாது இந்தப்பாடல் முழுவதுமே கண்ணதாசன் ஒரு த‌மிழ் ஆட்சியே நடத்தியிருப்பார். அதுப்பற்றி மட்டுமே ஒரு பதிவு எழுதலாம்.

அடுத்து வாலி, மூன்று தலைமுறையாக சினிமாப்பாடல்களில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர். இவர் ச‌மீபத்தில் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தின் 'எல்லாப் புகழும்..' என்ற பாடலில்
'எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே'  
என சற்று வித்தியாசமாக வார்த்தையையும் தாண்டி, ஒரு வசனத்தையே (வேர் + வைக்கும்) சிலேடையாக‌ புகுத்தி அசத்தியிருப்பார். ஆனால் இந்தப்படம் விஜயின் வெற்றிக்கு வேர் வைக்காமல் போனது வேற கதை.

இவை என்னதான் சிறப்பாக‌ இருந்தாலும் எனக்கென்னவோ சிலேடை என்ற‌வுடனே ஞாபகத்திற்கு வருவது வைரமுத்துவின் 'செவ்வாய்' தான். அமர்க்கள‌ம் திரைப்படத்தின்  'மேகங்கள் என்னைத்தொட்டு..' என்ற பாடலில் வரும்
'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தின‌ந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன், இதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?' 
என்ற வரிகளில் சிலேடையின் சிகரம் தொட்டிருப்பார். இதில் முதலாவது செவ்வாய்‍  செவ்வாய்க்கிரகம், அடுத்தது செவ் வாய் (சிவந்த வாய்). அந்த வாய் உதிரப்போகும் வார்த்தையில் தான் அவன் உயிர் உள்ளது என்ற அர்த்தத்தில் வரும் இந்த சிலேடை வைரமுத்துவின் தமிழ் ஆளுமைக்கு ஒரு சோறு பதம்.

இந்த  சிலேடைகள் தான் நான் மிகவும் ரசித்தவை. இவை தவிரவும் நிறைய இருக்கின்றன, இருக்கலாம். சமீபத்தில் கூட‌  'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கவிதாயினி தாமரை
'ஓமணப்பெண்ணே, ஓ  மணப்பெண்ணே' 
என   சிலேடையை இலேசாக தொட்டிருப்பார். முதல் ஓமணப்பெண்‍ ‍- மலையாள‌ம், அடுத்தது 'ஓ + மணப்பெண்'(கல்யாணப்பெண்).
('ஓ மனப்பெண்ணே' என்றும் வருகிறது)

பாடல்கள் மட்டுமல்ல, திரைப்பட பெயர்களில் கூட‌ சிலேடைகள் இருக்கின்றன‌. உதாரணமாக‌
'திருடா திருடா'. 

சேர்த்தெழுதினால் 'திருடாதிருடா' அதாவது 'திருடாது + இருடா'.
அதேப்போல் 'திருடா திருடி'‍‍ ‍- ‍‍திருடாது + இருடி.

இதுப்போல்  இன்னமும் நிறையவே இருக்கின்றன‍‍‍- மாத்தி யோசிக்க!

அவை தொடர்ந்து வரும்.....

அதுவரை நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிலேடைகளை மனக்கண்களில் ஓட்டிடுங்கள். அப்படியே இங்கே எனக்கும் ஒரு ஓட்டிடுங்கள்‍.(ஓட்டு+இடுங்கள்)
(ஷ்ஷப்பா...இந்த  ஒரு ஓட்ட‌க்கேக்க‌ எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு....அவ்...வூ)






Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner