
முதல் பார்வை, முதல் வார்த்தை, முதல் ஸ்பரிஷம், முதல் கோபம்.........
அந்த முதல் தருணங்களின் தவிப்புகளையும், தத்தளிப்புகளையும் கோர்த்தெடுத்தால் 'பேரரசு' கூட காதல் படமொன்று எடுத்துவிடலாம்!
இன்றோ நொடிக்கு நொடி காதல் தான்.
நெருங்கி நெருங்கி நொறுங்கிவிடுகின்றோம்.
இரகசியங்கள் எங்கள் நெருக்கத்தில் சிக்கி செத்துபோகின்றன.
'MEMORY CHIP'களை 'MESSAGE'களே நிரப்பிகின்றன.
ஊடலின் பொய்க்கோபங்கள் கூடலின் கண்ணீரில் சாயம்போகின்றன.
தோல்வித்துயர் அவள் மடியின் இதத்தில் தொலைந்துப்போகும்; வெற்றிக்களிப்போ அவள் உதட்டுச்சூட்டில் இரட்டிப்பாகும்!
விடுமுறை தினங்களில் தான் எங்களுக்கு முழு நாள் வேலை-காதல் அலுவலகத்தில்!
விடிய விடிய தேடுகிறோம் 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா....' என்று!
எங்கள் அரட்டையில் வைகைப்புயலும் சரி, வெள்ளைமாளிகையும் சரி, எதுவும் தப்பிவிட முடியாது!
A.R ரஹ்மானுக்கெல்லாம் நாங்கள் பல தடவை ஆஸ்கார் கொடுத்தாயிற்று.
எங்கள் கனவுகளின் 'டூயட்'டுகளை வைரமுத்துதான் எழுதி தருகின்றார்.
அவளும் என்னைப் போலவே 'அஞ்சல....'வையும் ரசித்திடுவாள், 'அனல் மேலே பனித்துளி..'யையும் ரசித்திடுவாள்.
அவளது தந்தை எப்போதோ எனக்கு 'UNCLE' ஆகிவிட்டார்; எனது வீட்டுச்சமையலிலும் அடிக்கடி அவள் கைப்பக்குவம்!
சில்மிஷங்கள் சில ....ஓ... நேரமாகிவிட்டது. காத்துக்கிடப்பாள் அவள் -காதல் அலுவலகத்தில்...!
யாவும் கற்பனை- (என்னைப்போல்) கடலை மட்டும் போடுபவர்களுக்கு; யாவும் நிஜம்- காதலர்களுக்கு...!
ஆனாலும் கற்பனையில் கூட நன்றாகத்தான் இ(னி)ருக்கின்றது-காதல்..!