ஞாயிறு, ஜூலை 25, 2010

முத்தையா முரளிதரன் என்னும் கனவான்!

2
Yeah Murali, your time is up!

முத்தையா முரளிதரன் ‍- கடந்த சில நாட்களாக இனம், மொழி, நாடு கடந்து  கிரிக்கட் ரசிகர்கள் அனைவரது உதடுகளிலும், உள்ளங்களில் நிறைந்த பெயர்! முரளி ஒரு மிகச்சிறந்த கிரிக்கட் வீரர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி! ஆனால அந்த ஒரு தகுதி மட்டும் அவரை இவ்வளவு பேரின் உள்ள‌ங்களிற்கு கொண்டுசேர்த்திருக்க முடியுமா என்பது ஐயமே!   உலக ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க திறமைவானாக இருந்தால் மட்டும் போதாது, கனவானாகவும் இருக்கவேண்டும்.

நான் 'கன‌வான்களின் விளையாட்டு' கிரிக்கட் இரசிகனாகிய‌ (1996 உலக‌க்கோப்பையின்) பின்னர் கிட்ட‌த்தட்ட கடந்த 15 வருடங்களில் பல போட்டிகளில் பல வீரர்களை இர‌சித்திருகினறேன். ஆனால் ஒருவரை மட்டுமே தொடந்து 15 வருடமாக ரசிக்கவெண்டுமென்றால் அவர் திறமையையும் மீறி இன்னபிற தகுதிகளும் இருக்கவேண்டும் என கருதுகின்றேன்.. அவை தான் மற்ற வீரர்களிடமிருந்து முரளியை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அவற்றில் முக்கியமானது, அவர் சக வீரர்களிடம் நடந்துக்கோள்ளும் விதம்! எனக்குத் தெரிந்து அவர் எந்த ஒருப் போட்டியிலும் எந்த ஒரு கட்டத்திலும் முக்கியமாக ஆட்டமிழக்கச் செய்தப்பின் எதிரணி வீரர்களை சீண்டியதோ அல்லது கடுப்பேத்தியதோ கிடையாது. மாறாக ஒரு வெள்ளந்திப்புன்னகையையும், குழ்ந்தைத்துள்ளலையுமே காணமுடியும். நேற்று வந்த சிறீஷாந்துகளும், முந்தா நாள் வந்த ஹர்பஜன் சிங்குகளும் செய்யும் அல‌ப்பரைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில் முரளியின் குழந்தைத்துள்ளலை யார் தான் ரசிக்காமல் இருப்பார்?
ப‌ந்தில் சுழலையும் பார்க்கலாம், முகத்தில் மழ‌லையும் பார்க்கலாம்!

மைதானத்தில் மட்டுமல்ல, வெளியேயும் தன் அணி வீரர்களிடமும், சக அணிவீரரகளிடமும் நட்பு வளர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்! இலங்கை அணியில் புதிதாக இணையும் இளம் வீரர்களை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வெளியில் அழைத்துச்செல்வது அனேகமாக முரளியாகத்தானிருக்கும் எனவும், நண்பராக‌ மட்டுமல்ல ஆலோசகராக கூட‌ பல தடவைகள் அவராக முன்வந்து ஆலோசனை வழ‌ங்குவார் எனவும் தன் அணி வீரர்களிடம் மட்டுமல்ல, எதிரணி வீரர்களிடமும் அவரது நட்பு
சக வீரர்கள் பொறாமைப்படும் அள்விற்கு இருக்கும் எனவும் ச‌மீபத்தில் தொலைக்காட்சி உரையாடலொன்றில் சனத் கூறியிருந்தார். அப்படி ஒருவரின் இழப்பு இல‌ங்கை அணிக்கு மைதானத்திற்கு உள்ளே மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியேயும் ஈடு செய்ய முடியாதவொன்றாக இருக்கப்போகின்றது என்பது மட்டும் திண்ணம்! 
 கையும் பேசும், வாயும் பேசும்!

எந்தவொரு சாதனைக்கு பின்னும் ப‌ல சோதனைகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்யும். முரளியும் இத‌ற்கு விதிவிலக்கல்ல.அவ்வாறான சோதனைக‌ள் முரளிக்கு ஒரு முறை அல்ல பல‌ முறை நடந்தேறியது நாம் அறிந்ததே. ப‌ந்தை எறிகின்றார் என்று 1995ஆம் ஆண்டு நடுவர் ட்ரல் ஹெயாரினாலும், தொடநது 1999 ஆம் ஆண்டு ரோஸ் எமர்சனாலும் குற்றம் சுமத்தப்பட்டார் (இதேப்போட்டியில் 303 என்ற வெற்றி இலக்கை இல‌ங்கை அடைந்தபோது வெற்றி ஓட்ட்த்தை பெற்றதும் முரளியே, அதே குழ்ந்தைத்துள்ளலோடு!).அது மட்டுமலலாது 2004ஆம் ஆண்டு அவரது துருப்புச்சீட்டு 'தூஷ்ரா' பந்தையும் கிரிக்கட் விதிகளுக்குட்பட்டது என நிரூபித்துக் காட்டவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.அப்போதெல்லாம் கூட ம‌ற்றவர்களைப்போல் வீணே வாய்ச்சவடால்களில் இற‌ங்காது அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு தனது பந்துவீச்சு விதிகளுக்குட்பட்டது தான் என நிரூபித்துக் காட்டினார். சமீபத்தில் கூட ரோஸ் எமர்சன் தன் 'திருவாய்' மலர்ந்து முரளி இந்த சாதனைகளுக்கு தகுதியானவர் அல்ல எனவும் அவரது பந்துவீச்சு முறையற்றது என்பதில் இன்னும் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதற்கு பிற‌கும் கூட முரளி அவரைப் பற்றி கூறுகையில் 'அவர மேல் தனக்கு எந்த வித‌மான வருத்தமும் இல்லையென‌வும், அவர் வெறும் கண்ணில் (Naked Eye) பார்ப்பதால் அப்படி தோன்றுவது இயல்பு, அது அவரின் கடமை எனவும் கூறியிருந்தார்.  இது முரளியின் பெருந்தன்மைக்கு ஒரு சோறு பதம்!
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை!

'டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு' என்ற முரளியின் திடீர் முடிவும் கூட காலம், நிலை அறிந்து எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எனக்கு துளியும் முர‌ண்பாடில்லை. இப்போதெல்லாம் பந்துவீச்சில் அதே பழைய முரளியை காணமுடிந்தாலும் களத்தடுப்பில் அந்த பழைய முரளியை காணமுடிவதில்லை. மனம் முரளியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் வயதிற்கு கட்டுப்பட்டுத் தானே ஆகவேண்டும். இது புரியாமல் சங்கக்காரவே சில போட்டிகளில் களத்தடுப்பின்போது முரளியை கடிந்துக்கொள்வதை நானே பார்த்திருக்கின்றேன். (இதுவும் முரளியின் இந்த திடீர் முடிவுக்கு நிச்சயம் ஒரு உந்துதலாக அமைந்திருக்கும்). முரளியை இப்போது தலையி(தோளி)ல் தூக்கிவைத்து கொண்டாடினாலும் சில போட்டிக‌ளின் தொடர்ச்சியான சறுக்கல், சமிந்த வாஸ், சனத்தைப் போல் முரளியையும் கழட்டிவிடப் பபட்டிருக்க‌கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இதை முரளியே அறிவார். அதனால் முரளியின் இந்த முடிவு நிச்சயம் ஒரு நல்ல முடிவு; காலம் அறிந்து எடுக்கப்பட்ட முடிவு. ஒரு நாள் போட்டிகளுக்குக்கூட 'போட்டிகளுக்கு என்னை தெரிவு செய்யத்தேவையில்லை, நானே போட்டிகளை தெரிவு செய்துக்கொள்ளுகின்றேன்' என்ற‌ மறைமுக செய்தியோடு முரளி எடுத்திருக்கும் அந்த முடிவுக்கு ஒரு சல்யூட்!  ஆனால் கடந்த‌ டெஸ்ட் தொடர்களின் வெற்றிகளில் முரளியின் பங்கும், அதை ஈடு செய்ய மென்டிஸ், சுராஜ் ரான்டிவ் போன்றோர் படவேண்டியிருக்கும் கஷ்டமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனக்கு இனி ஓய்வு, உனக்கு இனி வாழ்வு!

இறுதியாக‌ 800 விக்கெட்டுகளை தொட 8 விக்கெட்டுகளே மிச்சமிருந்த நிலையில் முரளி நினைத்திருந்தால் இந்தத் தொடர் முழுதும் விளையாடி அதை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் முதல் போட்டியிலேயே ஓய்வு என்ற முடிவை எடுத்திருந்தார் முத்தையா முரளிதரன்.  ஒன்று 8 விக்கட்டுகளையும் எப்படியும் எடுத்துவிடலாம் என்ற தன்ன‌ம்பிக்கை அல்லது 800 என்ற இலக்கத்தை துச்சமென நினைத்த அந்த மனம்‍‍ ஏதொவொன்றிற்காக‌ Hats off to you Murali!
நிறம் மாறிய பந்தும், நிறம் மாறாத புன்னகையும்!

முரளி இல்லாமல் இனி டெஸ்ட் போட்டிகளின் போது மைதானங்கள், இலங்கை அணியின் 'Dressing Room'  மட்டுமல்ல நமது தொலைக்காட்சி பெட்டிகளிலும் கூட அந்த வெறுமை தெரியத்தான் போகின்றது. ஆனால் ஒன்று, டெஸ்ட் போட்டிகளிலேனும் கள‌த்தடுப்பின்போது
'தலைவர்' சங்கக்கார முரளியை கடிந்துக்கொள்வதை கனத்த மனத்துடன் பார்க்கவேண்டியிருக்காது.

2 Response to முத்தையா முரளிதரன் என்னும் கனவான்!

ஜூலை 25, 2010 7:19 PM

அருமை சகோதரா.. நன்றாக எழுதியுள்ளீர்கள்.
முரளியைப் பலருக்கும் பிடிக்கக் காரணம் சாதனைகள் மட்டுமல்ல.. நீங்கள் பகிர்ந்த விஷயங்களும் தான்

ஜூலை 26, 2010 5:39 AM

நன்றி அண்ணா!
எனது வலைத்தளத்தில் உங்கள் முதல் பின்னூட்டம், முதல் வருகையும் கூட என்று நினைக்கின்றேன்.
தொடர்ந்து வருக!

கருத்துரையிடுக

அவசியம் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள், பின்னூட்டங்களாக‌!

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner